/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வரும் 6ல் பாலாலயம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வரும் 6ல் பாலாலயம்
ADDED : ஜூன் 01, 2025 08:24 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலை புதிப்பித்து கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து சமய அறநிலைத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, கோவில் நிதி, உபயதாரர்கள் நிதி 1.25 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு, மார்ச் மாதம் புனரமைப்பு பணிகள் துவங்கின.
மூலவர், உற்சவர், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், பைரவர், இடும்பன், கடம்பன் சன்னிதிகள் புனரமைத்தல். பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைத்தல், விமானங்கள், கோபுரங்கள் வண்ணம் தீட்டுதல், தளவரிசை பழுது பார்த்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், தேர் கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன.
தற்போது, மூலவர் சன்னிதி திருப்பணிக்காக பாலாலயம், ஜூன் 6ம் தேதி காலை நடக்கிறது. இதனால், ஜூன் 6ம் தேதி முதல், ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் வரை, பக்தர்கள் மூலவர் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்ய இயலாது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.