/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
133 ஏக்கர் ஏரியை முழுதாக 'ஆட்டை' போட்ட அட்டூழியம் ஆக்கிரமிப்பாளர்கள் செய்வதறியாமல் நீர்வளம், வருவாய் துறை அதிகாரிகள் திணறல்
/
133 ஏக்கர் ஏரியை முழுதாக 'ஆட்டை' போட்ட அட்டூழியம் ஆக்கிரமிப்பாளர்கள் செய்வதறியாமல் நீர்வளம், வருவாய் துறை அதிகாரிகள் திணறல்
133 ஏக்கர் ஏரியை முழுதாக 'ஆட்டை' போட்ட அட்டூழியம் ஆக்கிரமிப்பாளர்கள் செய்வதறியாமல் நீர்வளம், வருவாய் துறை அதிகாரிகள் திணறல்
133 ஏக்கர் ஏரியை முழுதாக 'ஆட்டை' போட்ட அட்டூழியம் ஆக்கிரமிப்பாளர்கள் செய்வதறியாமல் நீர்வளம், வருவாய் துறை அதிகாரிகள் திணறல்
ADDED : அக் 06, 2025 10:30 PM

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவிற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள, 133 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைக்கட்டுதாங்கல் ஏரியை, 25 ஆண்டுகளாக முழுமையாக ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற முடியாமல், நீர்வள ஆதாரத்துறை, வருவாய் துறை திணறி வருகிறது.
சென்னையை ஒட்டியிருக்கும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டுதோறும் மழை, வெள்ளப் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் குன்றத்துார் தாலுகாவிற்குட்பட்ட, வரதராஜபுரம் ஊராட்சியின் ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர் ஆகிய இடங்களும், வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரியின் கிளை கால்வாய் அருகே இப்பகுதிகள் இருப்பது, வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள அணைக்கட்டுதாங்கல் ஏரி முழுதாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதால், மேற்கண்ட பகுதிகளில் ஆண்டுதோறும் மழைநீர் சூழ்ந்து மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது.
அடையாறு ஆற்றை ஒட்டியிருக்கும் இந்த அணைக்கட்டுதாங்கலின் 133 ஏக்கர் ஏரியை முழுதாக ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏரி, தனி நகராகவே மாற்றப்பட்டுள்ளது.
இங்குள்ள 2,000க்கும் அதிகமான வீடுகளுக்கு, மின் வாரியம், சட்ட விரோதமாக மின் இணைப்பு வழங்கியுள்ளது. இதனாலேயே, 20 ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்தன.
கடந்த 2015, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் பெய்த பெருமழை சமயத்தில், அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ள நீர் சூழ்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், இந்த அணைக்கட்டுதாங்கல் ஏரியில் கட்டிய வீடுகளும் அடக்கம். இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள், ஏரியில் கட்டிய வீடுகளில் இருந்து காலி செய்ய மறுத்து தொடர்ந்து, அங்கேயே குடியிருக்கின்றனர்.
ஏரியின் அருகே உள்ள, அடையாறு கிளை கால்வாயில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு அருகிலும், கால்வாயை குறுகலாக்கியும், பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
வருவாய் துறை, நீர்வளத் துறை, மாவட்ட உயர் அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் மெத்தனம் காட்டியதாலேயே, 25 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் போயுள்ளது.
நீர்வள ஆதாரத்துறை சார்பில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டதே தவிர, அடுத்தகட்ட நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை.
கடந்த 2015ல் பெய்த பெருமழைக்கு பின், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு வசிப்போரை மறு குடியமர்வு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த நடவடிக்கையும் கைவிடப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் இல்லாததால், ஏரியினுள் அடுக்குமாடி கட்டடங்கள் அடுத்தடுத்து முளைக்கின்றன. அங்கு வசிப்போரிடம் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் இருப்பதால், அவர்களை காலி செய்யும் நடவடிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடையாற்றை ஒட்டியிருக்கும் ஆக்கிரமிப்புகளையும், அணைக்கட்டுதாங்கல் ஏரியை மீட்கவும் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுத்தால் மட்டுமே ஏரியை மீட்டெடுக்க முடியும்; மழைக்கால பாதிப்புகளை தடுக்க முடியும்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அணைக்கட்டு தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு, இரு முறை 'நோட்டீஸ்' கொடுத்துள்ளோம். ஆனாலும், அங்கிருந்து அவர்கள் செல்லாததால், இரண்டாவது முறையாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். அது முடிந்ததும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ஓட்டு ஆதாயம் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்தும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான ஓட்டுகள் இந்த ஏரியில் வசிப்போரிடம் உள்ளது. தேர்தலில் ஓட்டு கிடைப்பது பாதிக்கும் என்ற காரணத்தாலேயே, அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அரசியல் செய்கின்றனர். - எஸ்.ராஜேஷ், சமூக ஆர்வலர், வரதராஜபுரம்.