/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறைவேற்றிய தீர்மானங்கள் நிச்சயம் என்கிறார் கமிஷனர்
/
நிறைவேற்றிய தீர்மானங்கள் நிச்சயம் என்கிறார் கமிஷனர்
நிறைவேற்றிய தீர்மானங்கள் நிச்சயம் என்கிறார் கமிஷனர்
நிறைவேற்றிய தீர்மானங்கள் நிச்சயம் என்கிறார் கமிஷனர்
ADDED : செப் 24, 2024 04:48 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமி மீது, தி.மு.க., - அ.தி.மு.க., சுயேச்சைகள், காங்., - பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், கடந்த ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டது. ஆனால், எந்த கவுன்சிலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்காததால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே, கடந்த சில மாதங்களாகவே பிரச்னை நீடித்து வந்ததால், எட்டு மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடத்த முடியாமல் இருந்தது.
கடந்த செப்., 3ல், மாநகராட்சி கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., சுயேச்சை, அ.தி.மு.க., என, 18 கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமிக்கு ஆதரவாக, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். ஆனால், மீதமுள்ள 33 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல்,கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததால், மாநகராட்சி கூட்டம் சலசலப்பானது.
இக்கூட்டத்தில் கொண்டு வந்த 96 தீர்மானங்களில், 3 மற்றும் 4 ஆகிய தீர்மானங்கள் தவிர்த்து, மற்ற 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக, மேயர் ஒட்டுமொத்தமாக அறிவித்தார்.
தீர்மானங்கள் மீது விவாதம் நடத்த வேண்டும் என, கவுன்சிலர்கள் பிரச்னை செய்தனர். இருப்பினும், பிரச்னையுடன் அன்றைய கூட்டம் முடிந்தது.
மேயர் மகாலட்சுமி நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி, சுயேச்சை கவுன்சிலர் சாந்தி துரைராஜன் மற்றும் தி.மு.க., கவுன்சிலர் பிரவீன்குமார் ஆகிய இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், காஞ்சிபுரம் கலெக்டர், மேயர், கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானங்கள் மீது ஆட்சேபனை தெரிவித்து, அதிருப்தி கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்த, 96 தீர்மானங்களில், 3 மற்றும் 4 ஆகிய இரு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மற்றதீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சியின், https://www.tnurbantree.tn.gov.in/kancheepuram என்ற இணையதளத்திலும், தீர்மான விபரங்களை பதிவேற்றம்செய்துள்ளனர்.