/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு விவகாரம் கோட்டை விட்ட அதிகாரிகள் 1,400 வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம்
/
வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு விவகாரம் கோட்டை விட்ட அதிகாரிகள் 1,400 வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம்
வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு விவகாரம் கோட்டை விட்ட அதிகாரிகள் 1,400 வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம்
வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு விவகாரம் கோட்டை விட்ட அதிகாரிகள் 1,400 வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம்
ADDED : அக் 16, 2024 01:01 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நீர்நிலை ஆக்ரமிப்பு நிலங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. அதில் முதன்மையானதாக, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் உள்ள, 1,400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன.
வேகவதி ஆற்றுக்குள், 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளால், ஆறு கால்வாய் போல காட்சி அளிக்கிறது. ஆற்றுக்குள் வீடுகள் மட்டுமல்லாமல், கடைகள், மரம் அறுக்கும் ஆலை போன்ற வணிக ரீதியிலான ஆக்கிரமிப்புகளும் ஏராளமானதாக உள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 2019ல் திறந்த பின்னும், அவை அப்படியே உள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, 10 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, கீழ்கதிர்பூரில் மாற்று இடம் கட்டப்பட்டது. வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாததால், ஐந்து ஆண்டுகளாக அந்த கட்டடம் வீணாகி வருகிறது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கட்டி தரப்பட்டும், அவர்களை காலி செய்ய வைக்க வேண்டிய, கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், நடவடிக்கை இன்றி அலட்சியம் காட்டுவதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றாததால், தி.மு.க., அரசு அமைந்த பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆறு முழுமையாக மீட்டெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தி.மு.க., அரசு அமைந்து மூன்று ஆண்டுகளான நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சமயத்தில், ஆற்றுக்குள் குடியிருப்பவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பது தொடர்கிறது. பின், அவர்களை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு, பாய், பெட்ஷீட், உணவு பொருட்கள் கொடுத்து அதிகாரிகள் வழியனுப்புகின்றனர்.
கடந்த 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, பலரும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அந்த வீடுகளை அகற்ற மறுப்பது ஏன் என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தி.மு.க., ஆட்சி அமைந்த உடனே, சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
ஆனால், அதன்பின்னும் ஆக்கிரமிப்புகள் பற்றி மக்கள் பிரதிநிதிகளும் பேசாமல் அமைதி காக்கின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், வேகவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மவுனமாக உள்ளதால், இம்முறையும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஆற்றுக்குள் குடியிருப்பவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.