/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாய் இல்லாததால் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்
/
நீர்வரத்து கால்வாய் இல்லாததால் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்
நீர்வரத்து கால்வாய் இல்லாததால் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்
நீர்வரத்து கால்வாய் இல்லாததால் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்
ADDED : அக் 31, 2025 11:07 PM

ஸ்ரீபெரும்புதுார்: நீர்வரத்து கால்வாய் இல்லாததால், ஒரு வாரத் திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தும், ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால்சத்திரம் குளம் வறண்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, 14வது வார்டு, பட்டுநுால்சத்திரத்தில் உள்ள குளம், அப்பகுதியின் முக்கிய குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.
பல ஆண்டுகளாக இக்குளம் பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்து போய்விட்டது. இதனால், குளத்தை துார்வாரி, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 'அம்ருத் 2.0' திட்டத்தின் கீழ், 2022 - -23 நிதியாண்டில், 1.33 கோடி ரூபாய் செலவில், குளம் முழுதும் துார்வாரி ஆழப்படுத்தி, நடைபாதை, குளத்தை சுற்றி பாதுகாப்பு வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. ஆனால், குளத்திற்கு மழைநீர் வருவதற்கு, நீர்வரத்து கால்வாய் ஏற்படுத்தவில்லை.
வடகிழக்கு பருவமழை மற்றும் 'மோந்தா' புயலால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது.
இதனால், ஸ்ரீபெரும்புதுார் வட்டாரத்தில் உள்ள பல ஏரி, குளங்களில் 80 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது.
ஆனால், பட்டுநுால் சத்திரம் குளத்தில் ஒரு சதவீதம் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு உள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும் குளத்தில் தண்ணீர் தேக்கம் செய்ய முடியாமல் உள்ளதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் வீழ்ச்சி அடையும் சூழல் அதிகரித்து உள்ளது.
எனவே, குளத்தில் தண்ணீரை சேமிக்க நகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பட்டுநுால்சத்திரம் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

