/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்கு புதிய சாலைகள்... கிடையாது! குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதால் முடிவு
/
மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்கு புதிய சாலைகள்... கிடையாது! குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதால் முடிவு
மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்கு புதிய சாலைகள்... கிடையாது! குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதால் முடிவு
மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்கு புதிய சாலைகள்... கிடையாது! குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதால் முடிவு
ADDED : செப் 30, 2024 06:46 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், புதிதாக குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு திட்டங்களும், 640 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த இருப்பதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு புதிய சாலைகள் கிடையாது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 2011 வரை, 40 வார்டுகளுடன் நகராட்சியாக செயல்பட்டு வந்தது. இதையடுத்து, செவிலிமேடு பேரூராட்சி, தேனம்பாக்கம், ஓரிக்கை, நத்தப்பேட்டை ஆகிய ஊராட்சிகள், 2011ல், நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 36 சதுர கி.மீ., உடைய பெரு நகராட்சியாக மாறியது. இதையடுத்து, 2021ல், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களை புதிதாக செயல்படுத்த, உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது.
அதன்படி, செவிலிமேடு, நத்தப்பேட்டை போன்ற புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அடுத்த சில நாட்கள்
அதேபோல, மாநகராட்சி முழுதும் 51 வார்டுகளிலும் புதிதாக குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 318 கோடி ரூபாயும், நத்தப்பேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதிதாக சீரமைத்து செயல்படுத்த 68 கோடி ரூபாய் என, 640 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளனர்.
இதற்கான தீர்மானங்கள் ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், பணிகள் அடுத்த சில நாட்களில் துவங்க உள்ளன.
பாதாள சாக்கடை திட்டமும், குடிநீர் திட்டமும் மாநகராட்சி முழுதும் செயல்படுத்த உள்ளதால், மாநகராட்சியில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு புதிதாக எந்த இடத்திலும், புதிய சாலைகள் அமைக்கப்படாது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.
பாதாள சாக்கடை திட்டத்திலும், குடிநீர் திட்டத்திலும், சாலைகளில் பள்ளம் தோண்டும் பணிகளும், குழாய் பதிக்கும் பணிகளும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது, குடிநீர் தொட்டிகள் கட்டுவது என, பல்வேறு பணிகள் அடுத்த இரு ஆண்டுகள் மாநகராட்சி முழுதும் தீவிரமாக நடக்க உள்ளன.
புதிய சாலைகள் அமைக்கப்பட்டால், குடிநீர் திட்டத்திற்கு சாலைகளை சேதப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு புதிய சாலைகள் அமைக்கப்படாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், நகராட்சி நிர்வாகத் துறையும் புதிய சாலைகள் அமைக்கக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளது.
இதனால், மாநகராட்சி முழுதும் சேதமாகியுள்ள சாலைகளுக்கு, அடுத்த இரு ஆண்டுகளுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்படாது என்பது தெரியவந்துள்ளது.
புதிதாக சாலைகள் அமைக்கப்படாது என்ற நிலையில், படு மோசமாக சேதமடைந்து கிடக்கும் சாலைகளை எப்போது சீரமைப்பர் என்ற கேள்வியை நகரவாசிகள் எழுப்புகின்றனர்.
மாநகராட்சியில், 4 மண்டலங்களின்கீழ், 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் பெரும்பாலான சாலைகள் படுமோசமாக உள்ளன.
குறிப்பாக, பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் தெரு, மண்டபத் தெரு மோசமாக காட்சியளிக்கின்றன.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலைகளை அடுத்த இரு ஆண்டுகள் தாக்குபிடிக்கும் வகையில், நன்கு சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சீரமைக்க நடவடிக்கை
மாநகராட்சி மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, ''குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்த இருப்பதால், தற்போதைக்கு புதிய சாலைகள் அமைக்க முடியாது.
''நகராட்சி நிர்வாகத் துறை புதிய சாலைகளை அமைக்க அனுமதி வழங்குவதில்லை. அதனால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, அடுத்து வரும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து, சாலைகள் சீரமைக்கப்படும்' என்றார்.