/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்பத்தில் 'சிசிடிவி' கேமரா இல்லை தி.மு.க., விளம்பரம் மட்டும் 'பளிச்'
/
கம்பத்தில் 'சிசிடிவி' கேமரா இல்லை தி.மு.க., விளம்பரம் மட்டும் 'பளிச்'
கம்பத்தில் 'சிசிடிவி' கேமரா இல்லை தி.மு.க., விளம்பரம் மட்டும் 'பளிச்'
கம்பத்தில் 'சிசிடிவி' கேமரா இல்லை தி.மு.க., விளம்பரம் மட்டும் 'பளிச்'
ADDED : அக் 03, 2025 12:52 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் 48வது வார்டு முழுதும், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக தி.மு.க.,வினர் விளம்பரம் செய்து வரும் நிலையில், பல இடங்களில் அதற்கான கம்பங்களில் கேமரா பொருத்தப்படாமல் விளம்பரம் மட்டும் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் மாவட்டம் முழுதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும், மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரை, ஓரிக்கை பகுதியில் ஐந்து இடங்களில், 'சிசிடிவி' கேமரா கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
இந்த கம்பத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டியில், தி.மு.க., கவுன்சிலர் சார்பில், விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., மாவட்ட செயலர் சுந்தர், வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் ஆகியோரது படங்களுடன், 48வது வார்டு முழுதும், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்திக், காஞ்சிபுரம் மாநகர இளைஞர் அணி தி.மு.க., பணிகள் குழு தலைவர், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்ற தன் பதவி விபரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
கேமரா இயங்குவதற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின்விளக்குகள் ஒளிரும் நிலையில், இந்த கம்பத்தில், 'சிசிடிவி' கேமரா மட்டும் பொருத்தப்படவில்லை.
ஆனால், தி.மு.க., விளம்பரம் மட்டும், 'பளிச்' என, உள்ளது. இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தால் அதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கேமரா இல்லாத இந்த கம்பங்களில், தி.மு.க., விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது, விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.