ADDED : அக் 19, 2025 01:30 AM

உத்திரமேரூர்: பைக்குகளை திருடிய மூன்று பேரை சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர்.
சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எம்.மாம்பாக்கம், கரும்பாக்கம், அன்னாத்துார் ஆகிய பகுதிகளில், சாலவாக்கம் போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.மாம்பாக்கம் பகுதியில், 'ஹீரோ ஸ்பிளன்டர்' பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், வாலிபர் ஓட்டிவந்த பைக், உத்திரமேரூரில் திருடப்பட்டது என்றும், பிடிபட்டவர் குருமஞ்சேரியைச் சேர்ந்த சந்தோஷ், 22, என, தெரிய வந்தது. மேலும், விசாரணையில் அந்த வாலிபர் தன் நண்பர்களான சீத்தணஞ்சேரி மதன், 20; மற்றும் அரும்புலியூர் பிரசாந்த், 22, ஆகியோருடன் சேர்ந்து வாலாஜாபாத், அரும்புலியூர் ஆகிய இடங்களில் இரண்டு ஹீரோ ஸ்பிளன்டர் பைக்குகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.