ADDED : ஜன 21, 2025 01:08 AM

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்தோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
மேலக்கொண்டையூர் கிராமத்தில் அன்னை செங்கல் சூளை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஸ்ரீதர். இங்கு ஒடிசா மாநிலம், பலாங்கீர் பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் தங்கி, பணியாற்றி வருகின்றனர்.
கடந்த, 18ம் தேதி, இங்கு பணியாற்றி வந்த கன்குசரன் போகி என்பவரின் நான்கு மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக திடீரென இறந்தது. நேற்று முன்தினம் அங்கு பணியாற்றி வந்த, 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதில், ராமகிருஷ்ணபாக், 65 என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று மாலை, ஹாலதர்சண்டா, 52, என்பவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து, தொழிற்சாலையில் ஏற்பட்ட இறப்பு குறித்து, விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்தான், வயிற்றுப்போக்கு மற்றும் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., லோகேஸ்வரன் தலைமையில், வெங்கல் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபப்பி, திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, 250க்கும் மேற்பட்டோர், தங்களது குடும்பத்துடன் வேறு இடத்திற்கு பணியாற்றச் சென்றதால், செங்கல் சூளை காலியானது.

