/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்த...முடிவு!:வனத்துறையிடம் விபரம் கேட்கிறது நீர்வளத்துறை
/
பாலாற்றில் கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்த...முடிவு!:வனத்துறையிடம் விபரம் கேட்கிறது நீர்வளத்துறை
பாலாற்றில் கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்த...முடிவு!:வனத்துறையிடம் விபரம் கேட்கிறது நீர்வளத்துறை
பாலாற்றில் கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்த...முடிவு!:வனத்துறையிடம் விபரம் கேட்கிறது நீர்வளத்துறை
ADDED : நவ 29, 2024 12:13 AM

காஞ்சிபுரம்:புதர் போல் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பாலாற்றை சுத்தப்படுத்த, நீர்வளத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பாலாற்று படுகையில் எவ்வளவு மரங்கள் உள்ளன; அதனால் கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது உள்ளிட்ட விபரங்களை தருமாறு, வனத்துறைக்கு, நீர் வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக, பாலாறு செல்கிறது.
வட கிழக்கு பருவமழையின் போது, ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது.
இருப்பினும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகளின் நிலத்தடி நீர் மற்றும் 167 ஏரிகளின் நீர் மட்டம் உயர, பெரிய நீராதாரமாக பாலாறு விளங்கி வருகிறது. இந்த நீரின் வாயிலாக, 41,990 ஏக்கர் விளைநிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன.
இந்த தொன்மை வாய்ந்த பாலாறு, நீர்வளத் துறையினர் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டதால், ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளன.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம், செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத், பழையசீவரம், உள்ளாவூர் ஆகிய பகுதிகளில், பாலாற்று கரையின் இருபுறமும் மற்றும் பாலாற்றின் நடுவிலும், சீமைக்கருவேல மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளன.
இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சீமைக்கருவேல மரங்கள், பனை மரங்கள் வேருடன் அடித்து செல்லப்பட்டு விடுகின்றன. சில நேரங்களில் வெள்ள நீர் வெளியேற வழியின்றி, கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் பனை மரங்கள் வேருடன் ஆற்றில் அடித்து சென்று, வில்லிவலம் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விட்டது.
இதை தடுக்கும் விதமாக, நீர்வளத் துறையினர் எந்தெந்த பகுதிகளில் மரங்கள் உள்ளன; எவ்வளவு டன் என, கணக்கிடும் பணிக்கு வனத்துறையினருக்கு கடிதம் அனுப்ப, பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த கடிதத்தின் வாயிலாக, பாலாற்றை ஒட்டிய கிராமங்களில், மரங்களின் அடர்த்தி பரப்பு மற்றும் எடை ஆகிய பல்வேறு கணக்கீடுகள் செய்யப்பட உள்ளன.
இந்த பணிகளின் வாயிலாக, பாலாற்றின் இரு கரைகளின் ஓரம் மற்றும் பாலாற்றின் நடுவில் இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலர் நேரு கூறியதாவது:
பாலாற்று கரை மற்றும் படுகையில், அதிக அளவில் வளர்ந்து கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, நீர்வளத் துறையினர் மற்றும் கலெக்டரிடம் மனுக்களின் வாயிலாக வலியுறுத்தி வருகிறோம்.
மேலும், பருவ மழைக்காலங்களில், பாலாற்றில் செல்லும் தண்ணீரை சேமிக்க வழி வகையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, அரசிடம் கூடுதல் தடுப்பணை கட்டிக்கொடுக்க மனு அளித்து வருகிறோம். அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலாற்று படுகையில், புதர்போல் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், பனை மரங்கள் வேருடன் அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு, வனத்துறை அதிகாரிகளிடம் மகசூல் திட்ட அறிக்கை கேட்டு கடிதம் வழங்கியுள்ளோம். அவர்களிடம் இருந்து அறிக்கை கிடைத்த பின், இடையூறான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பாலாற்றில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்லவும், ஏரிகளுக்கு செல்லும் பாசன கால்வாய்களும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.