/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை பிரச்னை நிரந்தரமாக சரி செய்ய... ரூ.250 கோடி! தமிழக அரசிடம் நிதி கேட்கிறது காஞ்சி மாநகராட்சி
/
பாதாள சாக்கடை பிரச்னை நிரந்தரமாக சரி செய்ய... ரூ.250 கோடி! தமிழக அரசிடம் நிதி கேட்கிறது காஞ்சி மாநகராட்சி
பாதாள சாக்கடை பிரச்னை நிரந்தரமாக சரி செய்ய... ரூ.250 கோடி! தமிழக அரசிடம் நிதி கேட்கிறது காஞ்சி மாநகராட்சி
பாதாள சாக்கடை பிரச்னை நிரந்தரமாக சரி செய்ய... ரூ.250 கோடி! தமிழக அரசிடம் நிதி கேட்கிறது காஞ்சி மாநகராட்சி
ADDED : செப் 25, 2024 04:14 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் வெளியேறி தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதால், அவற்றை சரி செய்ய 250 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக, தமிழக அரசிடம், மாநகராட்சி நிர்வாகம் நிதி கேட்கிறது. இதற்காக, சட்டசபை மதிப்பீட்டுக்குழு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் கேட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின்கீழ், 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. இதில், 40 வார்டு களில், 1978ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
மாநகராட்சியில் 21,000 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வீடுகளில் சேகரமாகும் கழிவுநீரை, நத்தப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி அனுப்ப, நகர் முழுதும் நான்கு நீருந்து நிலையங்களும், ஆறு நீரேற்று நிலையங்களும் இயங்கி வருகின்றன.
சுகாதார சீர்கேடு
பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டத்தை, தனியார் நிறுவனம் வாயிலாக, மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர மேற்கொள்ள முடியாததால், நகரின் பல்வேறு இடங்களில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுவதை நகரவாசிகள் அன்றாடம் பார்க்கின்றனர்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு கழிவுநீரிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இப்பிரச்னை தொடரும் நிலையில், ஓரிக்கை, செவிலிமேடு, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், திருக்காலிமேடு உள்ளிட்ட, புதிதாக இணைந்த பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர உலக வங்கி நிதியுதவியின் கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன. ஆனால், ஏற்கனவே 40 வார்டுகளில் இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளன.
சில வார்டுகளில், மழைநீர் வெளியேற வழியில்லாமல், பாதாள சாக்கடை குழாய்களில் விட்டுள்ளனர். மழைக்காலத்தில் நகர் முழுதும் மிக மோசமான நிலை நீடிக்கிறது.
பாதாள சாக்கடை பிரச்னை தொடர்வதால், தனியார் நிறுவனத்தின் சூப்பர் சக்கர் வாகனம் வாயிலாக, 20 நாட்களாக, மாநகராட்சியின் முக்கிய இடங்களில், ஆள் இறங்கும் தொட்டிகளை சுத்தம் செய்து வந்தனர்.
இந்த வாகனத்தின் ஒரு நாள் வாடகையே, 1 லட்சம் ரூபாய் வரை கேட்பதால், இந்த வாகனத்தையே மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்க முடியுமா என அதிகாரிகள் யோசிக்கின்றனர்.
நிதி பற்றாக்குறை
ஆனால், 3 கோடி ரூபாய்க்கு மேலாக இந்த வாகனத்தின் மதிப்பு வருவதால், நிதி பற்றாக்குறை காரணமாக, வாகனத்தை மேலும் சில நாட்கள் வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
பாதாள சாக்கடை பிரச்னை அதிகமுள்ள பகுதிகளில், இதுவரை 100 ஆள் இறங்கும் தொட்டிகளில், இந்த வாகனம் வாயிலாக சுத்தம் செய்துள்ளனர். இதன் பலன் அடுத்த சில நாட்களில் தெரிய வரும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்காலிக தீர்வாக, சூப்பர் சக்கர் வாகனத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடக்கும் சூழலில், நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும் என, நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாநகராட்சியில் உள்ள 40 வார்டுகளிலும், 1978ம் ஆண்டு கொண்டு வந்த பாதாள சாக்கடை திட்டம், 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாதாள சாக்கடை பயன்பாடு, இப்போது பல மடங்கு அதிகமாகிவிட்டது.
இதனால், பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்க, 250 கோடி ரூபாய் தேவை என, மாநகராட்சி அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.
கழிவுநீர் அடிக்கடி வெளியேறும் வார்டுகளில் முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், குழாய்களை மாற்றவும், 250 கோடி ரூபாய் நிதியை, அரசிடம் பெற்றுத் தர வேண்டும் என, சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஆய்வு நடத்த வந்த சட்டசபை மதிப்பீட்டுக் குழுவிடம் மாநகராட்சி நிர்வாகம் கருத்துருவாக இந்த திட்டத்தை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் நம்பிக்கை
சட்டசபை மதிப்பீட்டுக் குழு, அரசிடம் பரிந்துரை செய்வதாக கூறியுள்ளது.
தமிழக அரசு இந்த திட்டத்தை பரிசீலனை செய்து, பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தால், மாநகராட்சி முழுதும் நீடிக்கும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியிலிருந்து நிபுணர் குழுவை அழைக்க உள்ளோம். அவர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு வந்து பாதாள சாக்கடை திட்டத்தை ஆய்வு செய்து, ஒரு அறிக்கை கொடுப்பார்கள்.
அதை வைத்து ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை எப்படி சரி செய்வது என, நடவடிக்கை எடுப்போம். மதிப்பீட்டுக் குழுவிடம், 250 கோடி ரூபாய் அரசுக்கு பரிந்துரை செய்ய கேட்டுள்ளோம்.
அந்த நிதி அரசு ஒதுக்கீடு செய்தால், பாதாள சாக்கடை பிரச்னைகளை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.