/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முக்கிய கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க முடியாமல்...தவிப்பு:பேட்டரி கார், தகவல் மையம் கேட்கும் வெளியூர் பக்தர்கள்
/
முக்கிய கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க முடியாமல்...தவிப்பு:பேட்டரி கார், தகவல் மையம் கேட்கும் வெளியூர் பக்தர்கள்
முக்கிய கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க முடியாமல்...தவிப்பு:பேட்டரி கார், தகவல் மையம் கேட்கும் வெளியூர் பக்தர்கள்
முக்கிய கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க முடியாமல்...தவிப்பு:பேட்டரி கார், தகவல் மையம் கேட்கும் வெளியூர் பக்தர்கள்
ADDED : ஏப் 17, 2025 10:02 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கோவில்களை, ஒரே நாளில் தரிசித்து செல்லும் வகையில், பேட்டரி கார் அல்லது மாநகர பேருந்து வசதி இல்லாததால், வெளியூர் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தவிர, கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும் முக்கிய கோவில்கள் சம்பந்தமான தகவல் மையம், நிழற்குடை பாதை மற்றும் 'வைபை' உள்ளிட்ட வசதிகள் இல்லாதது, அவர்களிடம் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகளை கடந்த கோவில்கள், வழிபாட்டில் உள்ளன. அதேபோல, 108 திவ்ய தேசங்களில் 14 கோவில்கள், காஞ்சிபுரத்திலேயே உள்ளன. பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர் கோவில்கள் இங்குள்ளன.
இதன் காரணமாகவே, வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து, இக்கோவில்களில் தரிசனம் செய்ய, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாததால், பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மத்திய அரசின், 'ஹெரிடே' திட்டத்தின் கீழ், 20 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய், பொருட்கள் பாதுகாப்பு அறை போன்றவை கட்டப்பட்டன. உரிய பராமரிப்பு இல்லாததால், அவை நாசமாகின. பக்தர்களுக்கு முழு பலனை இந்த திட்டங்கள் அளிக்கவில்லை.
அதேபோல, 'பிரசாத்' திட்டத்தின் கீழ், 2019ல் இரண்டு கோடி ரூபாய் செலவில் பக்தர்களுக்கு, நடைபாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், வெளியூர் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசு நிதி ஒதுக்கியபோதும், மாநகராட்சி, அறநிலையத் துறை போன்ற துறை அதிகாரிகளால், திட்டத்தை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை இல்லை.
தவிர, சுற்றுலா துறை நிர்வாகம், காஞ்சிபுரம் நகருக்கு தேவையான திட்டங்களை வகுக்கவும், அதுபற்றிய முன்மொழிவுகளையும் அரசுக்கு அனுப்பாததால், சுற்றுலா திட்டங்களும் கிடைக்கவில்லை. இதனால், பக்தர்கள் நேரடியாக சிரமப்படுகின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.
இவர்களுக்கென தனி நடைபாதை, நிழற்குடையுடன் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. கடும் வெயிலில், நகரின் முக்கிய சாலைகளில் பலர் நடந்து செல்கின்றனர்.
அதேபோல், அனைத்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், அனைத்து கோவில்களையும் இணைக்க பேட்டரி கார் வசதியும் கொண்டு வர வேண்டும் என்கின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரத்திற்கு புதிதாக வரும் வெளியூர்வாசிகளுக்கு தேவையான சுற்றுலா வழிகாட்டு விபரங்களை தெரிவிக்க, பேருந்து நிலையத்திலோ அல்லது முக்கிய கோவிலிலோ சுற்றுலா தகவல் மையம் இதுவரை அமைக்கப்படவில்லை.
'ஹெரிடே' திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில், பக்தர்களுக்கு இலவச 'வைபை' எனும் இணைய வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த கோவிலிலும் அந்த வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
இதுபோன்ற திட்டங்களை, சுற்றுலா துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என, பக்தர்களும், உள்ளூர் நகர மக்களும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, நகர பேருந்து சேவை இல்லாததால், பக்தர்களுக்கு பெரும் சேவை குறைபாடாக நினைக்கின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் நகர பேருந்து சேவை துவங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.
பக்தர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான நவீன வசதிகளையும், கோவில்களில் கட்டமைப்புகளையும் விரைவாக ஏற்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதுகுறித்து, சுற்றுலா துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'கோவில்கள், அமைப்புகளிடம் இருந்து, சுற்றுலா சார்ந்து, என்னென்ன தேவை உள்ளது என, கோரிக்கை விபரங்களை அளித்தால், அரசுக்கு கருத்துரு எழுதுவோம். இருப்பினும், சுற்றுலா துறை சார்பில், என்னென்ன தேவை காஞ்சிபுரத்தில் உள்ளது என்பதை அரசுக்கு தெரியபடுத்துகிறோம்' என்றார்.