/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவலம்
/
சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவலம்
சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவலம்
சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவலம்
ADDED : ஏப் 11, 2025 01:26 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தை பேறு, கண், காது, மூக்கு, பல், பால்வினை, காசநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பல்வேறு கட்டடங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் மட்டுமின்றி மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என, தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மருத்துவமனையில் உள்ள பல்வேறு கட்டடங்களின் தண்ணீர் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலத்தில் சுத்தம் செய்வது வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்த நாள், அடுத்த சுத்தம் செய்யும் நாள் என்ற விபரம் குறிப்பிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டி எண்.8ல், தொட்டி சுத்தம் செய்த நாள், 2024ம் ஆண்டு, நவ., 27 என, குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சுத்தம் செய்யும் நாள், 2024, டிச., 12 என, எழுதப்பட்டுள்ளது.
இதனால், அறிவிப்பில் கூறியபடி, கடந்த ஆண்டு டிச., 12ம் தேதி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யப்பட்டதா, அதன்பின், நான்கு மாதங்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளது.
அதேபோல, சமையல் கூடம் அருகில் குடிநீர் தொட்டியிலும், கடந்த ஆண்டு நவ., 24ம் தேதி, தொட்டி சுத்தம் செய்யப்பட்டதாவும், அடுத்து சுத்தம் செய்ய வேண்டிய தேதி, 2024ம் ஆண்டு, டிச., 9 என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தொட்டிகளிலும் நான்கு மாதங்களாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இருந்தால், தொட்டியில் உள்ள நீரில் புழுக்கள் உருவாகி, குடிநீர் மாசடையும் சூழல் உள்ளது.
இதனால், இந்நீரை பயன்படுத்துவோருக்கும் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

