/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாடில்லாத நிழற்குடை அவளூர் பயணியர் அவதி
/
பயன்பாடில்லாத நிழற்குடை அவளூர் பயணியர் அவதி
ADDED : ஜன 26, 2025 01:24 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அருகே அவளூர் கூட்டுச்சாலை வழியாக இளையனார்வேலுார், அங்கம்பாக்கம், கீழ்பேரமநல்லுார், காவாந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.
அவளூர், ஆசூர், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர், இப்பகுதி பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயணியர் நிழற்குடை கட்டடம் தற்போது பழுதடைந்துள்ளது.
மேலும், இப்பகுதியில் அவ்வப்போது மேற்கொண்ட சாலை சீரமைப்பால், சாலை உயரமாகவும், சாலையோர நிழற்குடை கட்டடம் தாழ்வாகவும் காணப்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் நிழற்குடை உள்ளே சகதியாக மாறுவதோடு, சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், இப்பகுதியில் பயணியர் நிழற்குடை இருந்தும், பயன்படுத்த இயலாத நிலை உள்ளதால், புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

