/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஒன்றிய ஏரிகளில் நீர் இருப்பு குறைவு
/
உத்திரமேரூர் ஒன்றிய ஏரிகளில் நீர் இருப்பு குறைவு
ADDED : அக் 18, 2024 01:51 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 96 ஏரிகளும், ஒன்றிய கட்டுப்பாட்டில் 124 ஏரிகள் என, மொத்தம் 220 ஏரிகள் உள்ளன.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவ மழைக்கு, இந்த ஏரிகளில் குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் இருப்பு இருந்தது. எனினும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், போதுமான அளவு மழை பெய்யாததால், தண்ணீர் இருப்பின் அளவு குறைந்தது.
தற்போது மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கன மழை பெய்யாததால் பெரும்பாலான ஏரிகளில் இன்னும் வரத்து துவங்காமல் உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியிலேயே பல ஏரிகளில் 50 சதவீதம் நீர் இருப்பு இருந்த நிலையில், தற்போது ஏரிகளில் குறைந்த அளவிலான தண்ணீரே இருப்பதால் விவசாயிகள் பருவ மழையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டேயன் கூறியதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஒரு சில ஏரிகள் தவிர்த்து பெரும்பாலான ஏரிகளில் 15 சதவீதம் அளவிற்கான தண்ணீரே இருப்பு உள்ளது.
ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் செல்ல ஏதுவான நிலையில் உள்ளது. இன்னும் கனமழை பெய்யாததால் பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து இல்லை.
ஆறுகளில் நீர்வரத்து துவங்கினாலே பல ஏரிகள் விரைவாக நிரம்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.