/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளைநிலங்களை சூழ்ந்த தண்ணீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் அவலம்
/
விளைநிலங்களை சூழ்ந்த தண்ணீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் அவலம்
விளைநிலங்களை சூழ்ந்த தண்ணீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் அவலம்
விளைநிலங்களை சூழ்ந்த தண்ணீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் அவலம்
ADDED : டிச 31, 2024 01:49 AM

உத்திரமேரூர்,
-அனுமந்தண்டலம் செய்யாற்று தடுப்பணையில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இதிலிருந்து, சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி வழியாக மருதம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் இருந்தது.
இந்த கால்வாய் வாயிலாக செய்யாற்றில் வெள்ளம் வரும்போது, மருதம் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடிந்தது. சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில், மழை நேரங்களில் விளை நிலங்களில், தேங்கும் மழைநீரை வெளியேற்ற, இந்த கால்வாய் பயன்பட்டு வந்தது.
தற்போது, கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால், சிலாம்பாக்கம் கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்த நிலங்களில், மழைநீர் தேங்கியுள்ளது.
மருதம் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், இந்த நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைநீர் சூழ்ந்துள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகின்றன.
எனவே, மருதம் ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, மழைநீரால் சேதமடைந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
மழைநீரில் சேதமடைந்த பயிர்கள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்பின், முறையாக நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.