/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வரத்து கால்வாய் கனமழை பெய்தும் நிரம்பாத ஏரி, குளங்கள் கோடை காலத்தை நினைத்து விவசாயிகள் கவலை
/
ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வரத்து கால்வாய் கனமழை பெய்தும் நிரம்பாத ஏரி, குளங்கள் கோடை காலத்தை நினைத்து விவசாயிகள் கவலை
ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வரத்து கால்வாய் கனமழை பெய்தும் நிரம்பாத ஏரி, குளங்கள் கோடை காலத்தை நினைத்து விவசாயிகள் கவலை
ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வரத்து கால்வாய் கனமழை பெய்தும் நிரம்பாத ஏரி, குளங்கள் கோடை காலத்தை நினைத்து விவசாயிகள் கவலை
ADDED : டிச 05, 2024 11:36 PM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக கடந்த வாரம் முழுதும், ஐந்து தாலுகாக்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக, நவ., 29ம் தேதி 8.6 செ.மீ., மழையும், 30ல் 85 செ.மீ., மற்றும் டிச., 1ல் 6.0 செ.மீ., என, தொடர் கனமழை பெய்தது.
புயல் கரையை கடந்த பின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்வது குறைந்து, மாவட்டத்தில் மூன்று நாட்களாக எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை.
கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் பெரும்பாலான எண்ணிக்கையில் நிரம்பிவிடும் என, விவசாயிகள் எதிர்ப்பார்த்தனர்.
வெறும் எட்டு ஏரி
ஆனால், குறைவான எண்ணிக்கையிலேயே ஏரி, குளங்களில் நீர்வரத்து இருப்பதால், ஏரிகள் பெரும்பாலும் நிரம்பவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாற்றில் மட்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பாயும் பாலாற்றிலும், வேகவதி ஆற்றிலும் நீர்வரத்து துவங்கவில்லை.
அதேபோல், காஞ்சிபுரம் நகரில் உள்ள அல்லாபாத் ஏரி, ரங்கசாமி குளம், பொய்கை ஆழ்வார் குளம் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
மாநகராட்சி எல்லையில் உள்ள அல்லாபாத் ஏரி, 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் ஏரியை கண்டுகொள்ளாமல் உள்ளது.
ஏரிகளை பொறுத்தவரையில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. இதில், நேற்றைய கணக்கெடுப்பின்படி, 65 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன.
அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய ஏரிகளில், வெறும் எட்டு ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
குற்றச்சாட்டு
டிசம்பரிலும் மழை பெய்யாமல் பருவமழை பொய்த்தால், ஏரிகள் வறண்டு, ஆடு, மாடுகள் குடிக்க கூட தண்ணீர் இல்லாத சூழல் ஏற்படும் எனவும், கோடையில் விவசாயத்திற்கு கூட தண்ணீரில்லாத நிலை ஏற்படும் என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களும், நீர் வெளியேறும் போக்கு கால்வாய்களும் பல இடங்களில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.
இவற்றை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களும், வட்டார வளர்ச்சித்துறை, வருவாய் துறை, நீர்வள ஆதாரத்துறையினர் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்காததே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீர்வரத்து கால்வாய்களை மீட்க, மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், அமைச்சர் குறைதீர் கூட்டம் என, பல இடங்களில் மனு அளிக்கும் சமூக ஆர்வலர்கள் பலரது மனுக்களுக்கு, தற்போது வரை தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.