/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்னேரி கலங்கலில் வெளியேறும் நீர் சேமிப்பு...மாற்றுத்திட்டம்:புது அணைக்கட்டால் 300 ஏக்கருக்கு பாசன வசதி
/
தென்னேரி கலங்கலில் வெளியேறும் நீர் சேமிப்பு...மாற்றுத்திட்டம்:புது அணைக்கட்டால் 300 ஏக்கருக்கு பாசன வசதி
தென்னேரி கலங்கலில் வெளியேறும் நீர் சேமிப்பு...மாற்றுத்திட்டம்:புது அணைக்கட்டால் 300 ஏக்கருக்கு பாசன வசதி
தென்னேரி கலங்கலில் வெளியேறும் நீர் சேமிப்பு...மாற்றுத்திட்டம்:புது அணைக்கட்டால் 300 ஏக்கருக்கு பாசன வசதி
ADDED : ஆக 08, 2024 02:21 AM

காஞ்சிபுரம்:தென்னேரி கலங்கல் வழியாக வீணாகும் தண்ணீரை சேமிக்க, தொள்ளாழியில் அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 300 ஏக்கர் நீர் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரி, 18 அடி தண்ணீரை சேமிக்கும், மிகப்பெரிய ஏரியாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி 5,858 ஏக்கர் பரப்பளவில், தென்னேரி, மடவிளாகம், அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களுக்கு பாசனம் வசதி பெறுகிறது.
வடகிழக்கு பருவ மழையால், ஆண்டுதோறும் தென்னேரி ஏரி நிரம்பி கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீர், தேவரியம்பாக்கம், உள்ளாவூர், ஆத்துார் வழியாக கொளவாய் ஏரி கழிவுநீரில் கலக்கிறது.
இதுபோல, வீணாக வெளியேறும் தண்ணீர் ஒரு டி.எம்.சி., தண்ணீருக்கு மேல் இருக்கும் என, விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். கலங்கல் வழியாக, வீணாகும் தண்ணீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தன.
இந்த நீரையும் சேமித்து, பயன்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, உள்ளாவூர் அடுத்த, தொள்ளாழியில், 7 கோடி ரூபாய் செலவில், புதிய அணையை கட்டும் பணியை, நீர்வள ஆதாரத் துறையினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கினர்.
இந்த அணைக்கட்டு, கட்டும் பணி நிறைவு பெற்று உள்ளது. வட கிழக்கு பருவ மழைக்கு, தென்னேரி ஏரி நிரம்பி கலங்கல் வழியாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் போது, தொள்ளாழி அணைக்கட்டில் தண்ணீர் சேமிக்கும் வகையில், வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த அணைக்கட்டால், 300 ஏக்கர் வரையில் நீர் பாசனம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
தென்னேரி ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறினால், ஒரு மாதம் முழுதும் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர், கொளவாய் ஏரி கழிவுநீரில் வீணாக கலக்கிறது.
ஒவ்வொரு வடகிழக்கு பருவ மழைக்கும், பல டி.எம்.சி., தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்த தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது.
இதை தடுக்கும் வகையில், நீர்வள ஆதாரத் துறையினர் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வழி வகை செய்ய வேண்டும். இதன் வாயிலாக, நீர் பாசனம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொள்ளாழியில், 27 மீட்டர் நீளமும், 1.48 மீட்டர் உயரமும் கொண்ட புதிய அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த அணைக்கட்டால், தென்னேரி ஏரி நிரம்பி கலங்கல் செல்லும் போது, தொள்ளாழி மடுவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
இந்த தண்ணீரால், தொள்ளாழி, தோண்டாங்குளம் ஆகிய கிராம விவசாயிகள் பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீர்மட்டம் உயரும்
தொள்ளாழி அணைக்கட்டில் தண்ணீர் தேங்கினால், மேட்டு நிலங்களுக்கு நீர் பாசனம் செய்வதற்கு சவுகரியமாக இருக்கும். ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, பிற பிரதான ஏரி கலங்கலில் வீணாக செல்லும் தண்ணீரையும் சேமிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
சு.எல்லப்பன்,
விவசாயி, தோண்டாங்குளம்.