ADDED : ஜூலை 14, 2025 11:51 PM
காஞ்சிபுரம்,'தாட்கோ' வாயிலாக, 15 பயனாளிகளுக்கு, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி நேற்று வழங்கினார்.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், தாட்கோ மற்றும் துாய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும், 250 துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தற்காலிக பணியாளர்கள் தங்களின் பணி விபரங்களை வாரிய தலைவரிடம் எடுத்து கூறினர். சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட குறைபாடுகளை, வாரிய தலைவரிடம் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், தாட்கோ திட்டத்தின் கீழ் கல்விக்கடன், திருமண உதவித்தொகை, சிறு வணிக கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், 15 பயனாளிகளுக்கு, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை, பயனாளிகளுக்கு நல வாரிய தலைவர் ஆறுச்சாமி வழங்கினார்.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.