/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் அண்ணா பூங்கா நிலை படுமோசம் சீரமைப்போம் என மேயர் அறிவிப்பு என்னாச்சு?
/
காஞ்சியில் அண்ணா பூங்கா நிலை படுமோசம் சீரமைப்போம் என மேயர் அறிவிப்பு என்னாச்சு?
காஞ்சியில் அண்ணா பூங்கா நிலை படுமோசம் சீரமைப்போம் என மேயர் அறிவிப்பு என்னாச்சு?
காஞ்சியில் அண்ணா பூங்கா நிலை படுமோசம் சீரமைப்போம் என மேயர் அறிவிப்பு என்னாச்சு?
ADDED : செப் 28, 2025 01:23 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணா நுாற்றாண்டு பூங்கா, ஒரு கோடி ரூபாயில் சீரமைக்கப்படும் என, மேயர் மகாலட்சுமி அறிவிப்பு வெளியிட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில், சீரமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள் ளது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 2009ல், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, காஞ்சிபுரம் நகருக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்த நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றாக, பிள்ளையார்பாளையம் பகுதியில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில், அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா அமைக்கப்பட்டது.
இப்பூங்கா காஞ்சிபுரத்தில் பெரிய அளவில், நவீன வசதிகளுடன், விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டதால் தி.மு.க.,வினர் பெருமை பேசி வந்தனர். ஆனால், அடுத்த ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பராமரிப்புடன் இருந்தது.
அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, இப்பூங்கா மிக மோசமான நிலைக்கு சென்றது. 10 ஆண்டுகள் கழித்து, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், அமைச்சர் அன்பரசன், இப்பூங்காவை பார்வையிட்டு, மனக்குமுறலை அங்கேயே தெரிவித்தார்.
'பூங்காவை பராமரிப்பு இன்றி நாசம் செய்துவிட்டதாக' புலம்பினார். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒரு சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முழுமையான பராமரிப்பு பணிகள் செய்யாமல் உள்ளது .
பூங்காவின் நடைபாதை, கழிப்பறை, மின் பெட்டிகள், விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், அழகு நீரூற்றுகள் என, அனைத்தும் நாசமாகி உள்ளன. மின் விளக்குகளும் சரிவர எரிவதில்லை. கண்காணிப்பு கேமரா இல்லாததால் பாதுகாப்பு இன்றி உள்ளதால், நகர மக்கள் உள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர்.
மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஒரு கோடி ரூபாய் செலவில், இந்த பூங்காவை சீரமைப்போம் என, கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுவரை, பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடக்காமல், மோசமான நிலையிலேயே உள்ளது. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு, ஆறு மாதங்கள் ஆன நிலையில், பூங்கா சீரமைப்பு எப்போது துவங்கும் என, நகர மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.