/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியில் திட்ட பணிகளுக்கான 'டெண்டர்' ... தள்ளிப்போகும் மர்மம் என்ன?: நிர்வாக குளறுபடி என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
மாநகராட்சியில் திட்ட பணிகளுக்கான 'டெண்டர்' ... தள்ளிப்போகும் மர்மம் என்ன?: நிர்வாக குளறுபடி என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
மாநகராட்சியில் திட்ட பணிகளுக்கான 'டெண்டர்' ... தள்ளிப்போகும் மர்மம் என்ன?: நிர்வாக குளறுபடி என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
மாநகராட்சியில் திட்ட பணிகளுக்கான 'டெண்டர்' ... தள்ளிப்போகும் மர்மம் என்ன?: நிர்வாக குளறுபடி என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
UPDATED : அக் 09, 2025 02:14 AM
ADDED : அக் 09, 2025 01:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பொது, கல்வி உள்ளிட்ட நிதியின் கீழ், 60 வகையான வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதை அடிக்கடி ஒத்தி வைப்பதால், அதன் பின்னால் உள்ள மர்மம் என்ன என, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாநகராட்சிக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவதற்காகவே இவ்வாறு நடப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள், பிரச்னைகள் உள்ளிட்டவற்றை தீர்க்க, தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமியும், கமிஷனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளனர்.
வார்டுகளில் நிலவும் சாலை, குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய, ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி பட்ஜெட் போடப்படுகிறது.
பணிகள் இழுபறி தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்களும், தங்கள் வார்டுகளில் திட்டப் பணிகள் ஏற்படுத்தக்கோரி, ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் பட்டியலிடுகின்றனர்.
அப்போது மட்டும் தீர்மானம் போடும் மாநகராட்சி, அத்திட்டப் பணிகளுக்கான நிதியை முறையாக ஒதுக்குவதில்லை.
அப்படியே நிதி ஒதுக்கி, 'டெண்டர்' விடப்பட்டும் பணிகள் இழுபறியாவதால், கோரிக்கை பட்டியலை தரும் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைகின்றனர்.
மாதந்தோறும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம் போடும் மாநகராட்சி, அதிலிருந்து குறிப்பிட்ட அளவு பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்குகிறது.
மற்ற பணிகளுக்கு டெண்டர் விட்டாலும், பின் ஒத்தி வைக்கிறது. ஒத்தி வைப்பது குறித்து, டெண்டர் விடும் பணிகளை கவனிக்கும் மாநகராட்சி பணிகள் குழுவிடம்கூட, அதிகாரிகள் முறையாக தெரிவிப்பதில்லை.
அந்த வகையில், கல்வி, பொது, குடிநீர் உள்ளிட்ட நிதியின் கீழ், 60 வகையான வளர்ச்சி திட்டப்பணிகள் செய்ய விடப்பட்ட டெண்டர் ஒத்தி வைக்கப்படுவதாக, கமிஷனர் பாலசுப்ர மணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 7ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்ட இந்த டெண்டர் பணிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிர்வாக காரணங்களால், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தாலும், அதை ஏற்காமல் கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
மாநகராட்சிக்கு நெருக்கமான, கட்சியினருக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பயனடையவே டெண்டர் பணிகள் ஒத்தி வைக்கப்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முறைகேடு ராஜாஜி காய்கறி சந்தை டெண்டர் ஐந்து முறை ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியாக மார்க்கெட் சங்கம் ஏலம் எடுத்தது. டெண்டர் விவகாரத்தில், இது போன்ற பல சம்பவங்கள் மாநகராட்சியில் நடந்துள்ளன.
வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடுவதும், அதை மீண்டும் ஒத்தி வைப்பதும் வாடிக்கையாகிவிட்டதாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். நிர்வாக குளறுபடி, வெளிப்படை தன்மை இல்லாத நிர்வாக த்தால், உரிய வசதிகள் கிடைக்காமல் நகர மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கு ற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து, 23வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா சம்பத் கூறியதாவது:
டெண்டர் விடும் தேதி குறிப்பிடப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் நடக்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டெண்டர் பணிகளை ஒத்தி வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இது, முறைகேடுக்கு வழிவகுக்கும். என்ன காரணத்திற்காக டெண்டர் தேதியை அடிக்கடி மாற்றுகின்றனர் என, அதிகாரிகள் வெளிப்படையாக கூறுவதே இல்லை.
யாரையோ திருப்திபடுத்தவே டெண்டர்களை ஒத்தி வைக்கின்றனர். நிர்வாகம், வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் தி.மு.க., வைச் சேர்ந்த பணிகள் குழு தலைவர் கார்த்தி கூறியதாவது:
மாநகராட்சியின் பணிகள் குழு தலைவராக பொறுப்பேற்றது முதல், டெண்டர் சம்பந்தமான பணிகளில் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடிவதில்லை. ஒப்பந்ததாரர்களை அழைத்து மீட்டிங் நடத்த முயலும்போதெல்லாமல், பல தரப்பிலிருந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது.
குழு எடுக்க வேண்டிய டெண்டர் முடிவுகளை, அதிகாரிகளே கவனிக்கின்றனர். கமிஷனர், பொறியாளர் என, எந்த தரப்பில் இருந்தும் என் செயல்பாட்டிற்கு ஆதரவு இல்லை. டெண்டர் ஒத்தி வைப்பது பற்றி என்னிடம்கூட அதிகாரிகள் தெரிவிப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''டெண்டர் பணிகள் பற்றி, 'தமிழக அரசு டெண்டர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. இதனால், டெண்டரை ஒத்தி வைக்க நேரிட்டது. தீபாவளி முடிந்தவுடன் டெண்டர் விடப்படும். 60 பணிகள் விபரத்தை இணையத்தில் ஏற்றுவதால் தொல்நுட்ப பிரச்னை ஏற்பட்டது,''' என்றார்.