/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேட்பாளர்களின் சூறாவளி தேர்தல் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளியூர் ஆட்களை வெளியேற்றும் போலீசார்
/
வேட்பாளர்களின் சூறாவளி தேர்தல் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளியூர் ஆட்களை வெளியேற்றும் போலீசார்
வேட்பாளர்களின் சூறாவளி தேர்தல் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளியூர் ஆட்களை வெளியேற்றும் போலீசார்
வேட்பாளர்களின் சூறாவளி தேர்தல் பிரசாரம்...ஓய்ந்தது!:வெளியூர் ஆட்களை வெளியேற்றும் போலீசார்
ADDED : ஏப் 17, 2024 09:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,- - பா.ம.க., - நாம் தமிழர் என பிரதான கட்சியின் வேட்பாளர்கள் மேற்கொண்டு வந்த சூறாவளி பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் தங்கியுள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் லோக்சபா தேர்தல் நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அ.தி.மு.க., வேட்பாளராக பெரும்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவரான ராஜசேகர் என்பவரும்; தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.பி., செல்வமும்; பா.ம.க., சார்பில் ஜோதியும்; நாம் தமிழர் சார்பில் சந்தோஷ்குமார் என்பவரும் அறிவிக்கப்பட்டனர். பிரதான கட்சி வேட்பாளர்கள் தவிர சுயேச்சைகள் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒத்துழைப்பு இல்லை
வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவர்களின் வேட்பு மனுக்களை கலெக்டர் கலைச்செல்வி ஏற்றுக் கொண்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொகுதியில் உள்ள 1,932 ஓட்டுச்சாவடிகளிலும் முன்னேற்பாடு பணிகளும், 372 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.
இதற்கிடையே, தொகுதி முழுதும் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்தன. ஒவ்வொரு கட்சி சார்பிலும், ஒன்றியம், கிராமம், பேரூராட்சி, மாநகராட்சியில் உள்ள வார்டு வாரியாக வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு பிரியாணி, பொங்கல், இட்லி, கறிக்குழம்பு என சகல உணவுகளும், மது பாட்டில்களும் வினியோகிக்கப்பட்டன. இதனால், ஏராளமானோர் ஆர்வத்துடன் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
பிரசாரத்தின்போது தே.மு.தி.க.,வை அ.தி.மு.க., நிர்வாகிகள் மதிப்பதில்லை எனவும், பிரசாரத்திற்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை எனவும் புலம்பினர். பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., பிரசாரத்திற்கு அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை என்றனர்.
தி.மு.க., கூட்டணியில், உட்கட்சி பூசல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இவ்வாறு, தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பிரசாரம் முடியும் வரை அண்ணாதுரை பிறந்த ஊரான காஞ்சிபுரம் வராததால், தி.மு.க.,வினர் வருத்தப்பட்டனர். இதனிடையே, தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், தங்களது கட்சியினருக்கு எவ்வளவு ஓட்டு உள்ளது என கணக்கெடுப்பு பணியிலும் பிரதான கட்சியினர் ஈடுபட்டனர்.
இதற்காகவே, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 20,000 ரூபாய் வரை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், ஒவ்வொரு கிராமத்திலும், நகர்ப்புறத்தில் வார்டு வாரியாகவும் துண்டு பிரசுரம் அச்சடிப்பது, பிரசாரம் செய்வது போன்ற பணிகள் சூடுபிடித்தன. கடைகளுக்கு சென்ற வேட்பாளர்கள், அங்கு வியாபாரம் செய்வது, உணவு தயாரிப்பது என, அந்தந்த வியாபாரிகள் தொழிலை செய்து காண்பித்து அவர்களிடம் ஓட்டு கேட்டனர்.
150 புகார்கள்
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., நாம் தமிழர் என அனைத்து கட்சியினருமே ஏராளமான தேர்தல் விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 'சி -விஜில்' மொபைல் ஆப் மூலமாக, 150க்கும் மேற்பட்ட புகார்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு வந்துள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 54 வழக்குகள் பதிவானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். பிரதான கட்சியினர் தங்கள் பிரசாரத்தின்போது ஏராளமான விதிமீறலில் ஈடுபட்டனர்.
வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு கூட செல்லாமல் இருந்தனர். சில சுயேச்சை வேட்பாளர்கள், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்திற்கு சென்ற சம்பவங்களும் நடந்தன.
கடந்த ஒரு வாரமாக பிரசாரம் மேலும் சூடுபிடித்தது. கடும் வெயிலாக இருந்த போதும், கட்சியினர் கிராமம் வாரியாக பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்தின் இறுதி நாட்களான கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை, கட்சி நிர்வாகிகள் தெருமுனை கூட்டங்கள் நடத்தியும், வீடு வீடாகச் சென்றும் ஓட்டு கேட்டனர்.
இந்நிலையில், பிரசாரத்தின் கடை நாளான நேற்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. காஞ்சிபுரம் தொகுதியின் வேட்பாளர்கள், மாலை 6:00 மணிக்கு காஞ்சிபுரம் மாநகரம் உள்ளிட்ட அந்தந்த இடங்களில் தங்களின் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர்.
கலெக்டர் கலைச்செல்வி ஏற்கனவே உத்தரவிட்டதை தொடர்ந்து, வெளியூரைச் சேர்ந்த கட்சியினர், தொகுதியில் ஓட்டு இல்லாத நபர்கள் தொகுதியிலிருந்து வெளியேற அறிவுறுத்தியிருந்தார்.
விடுதி, திருமண மண்டபம் போன்ற இடங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
சூறாவளி பிரசாரம் நேற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை இன்று மாலை அனுப்பி வைக்க உள்ளது. சட்டசபை தொகுதிகளில் உள்ள கிடங்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்ல, சரக்கு வாகனங்கள் தயாராக உள்ளன.
லோக்சபா தொகுதி முழுதும், 2,319 மின்னணு ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. இவற்றை எடுத்து செல்ல, 254 வாகனங்கள் தயாராக உள்ளன. இன்று மாலை ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்.

