/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவல்துறை உத்தரவை மீறும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை வருமா?
/
காவல்துறை உத்தரவை மீறும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை வருமா?
காவல்துறை உத்தரவை மீறும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை வருமா?
காவல்துறை உத்தரவை மீறும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை வருமா?
ADDED : அக் 04, 2025 12:58 AM

வாலாஜாபாத்:அங்கம்பாக்கம் மற்றும் அவளூர் சாலையில், காவல்துறை உத்தரவை மீறி, பள்ளி நேரங்களில் இயங்கும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் அடுத்த தம்மனுாரில், கடந்த ஆண்டில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அந்நிலத்தில், சில மாதங்களுக்கு முன் அரசு அனுமதி பெற்று தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல் குவாரியில் வெட்டி எடுக்கப்படும் மண் மற்றும் கல் உள்ளிட்ட கனிமங்கள் நெய்க்குப்பம், கண்ணாடியன்குடிசை, அங்கம்பாக்கம், அவளூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக வாலாஜாபாத் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த கனரக வாகனங்களால் குறுகிய அக்கிராம சாலைகளில் நெரிசல் மற்றும் புழுதி பரவுதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பதோடு, போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ - மாணவியர் குறித்த நேரத்தில் கல்வி கூடங்களுக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கம்பாக்கம், அவளூர் கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் இயக்க, மாநகர காவல் நிலையம் சார்பில் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்தான எச்சரிக்கை பலகை கிராம சாலைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.
எனினும், காவல்துறை பிறப்பித்த உத்தரவை மீறி, பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.
எனவே, காவல்துறை உத்தரவை மீறி கிராம சாலைகளில் இயங்கும் கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.