/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செயற்கை நிறம் சேர்த்த தர்பூசணி காஞ்சியில் விற்பனை உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா?
/
செயற்கை நிறம் சேர்த்த தர்பூசணி காஞ்சியில் விற்பனை உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா?
செயற்கை நிறம் சேர்த்த தர்பூசணி காஞ்சியில் விற்பனை உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா?
செயற்கை நிறம் சேர்த்த தர்பூசணி காஞ்சியில் விற்பனை உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மார் 16, 2025 01:22 AM

காஞ்சிபுரம், :கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. நடமாடும் வாகனங்கள், நடைபாதை கடைகளில் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், சில வியாபாரிகள் தர்பூசணியில் ஊசி வாயிலாக செயற்கையான நிறத்திற்காக சிவப்பு நிற ரசாயண நிறமூட்டியை செலுத்தி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
விவசாயிகளிடம் இருந்து, தோட்டத்தில் இருந்து நேரடியாக தர்பூசணியை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், பழுக்காத காய்களுக்கு சிவப்பு நிற ரசாயன நிறமூட்டியை ஊசி வாயிலாக செலுத்துகின்றனர்.
இந்தவித தர்பூசணியை சிறு துண்டுகளாக வெட்டும்போது, நன்கு பழுத்த பழம்போல, சிவப்பாக காட்சியளிக்கும். வியாபாரிகளின் மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள், உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும் ரசாயணம் கலந்த தர்பூசணியை வாங்கிச் செல்கின்றனர்.
ரசாயண நிறத்தை கலந்த தர்பூசணி சாப்பிடுவதால், வாந்தி, வயிற்றுபோக்கும், உணவு செரிமான பிரச்னை, உடல் சோர்வும், தொடர்ந்து ரசாயண நிறம் கலந்த தர்பூசணியை சாப்பிடுவோருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உணவு பாதுகாப்பு துறையினர், தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள், நடைபாதை, நடமாடுகள் கடைகளில், ஆய்வு செய்து, ரசாயண நிறமூட்டியை செலுத்திய தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா கூறியதாவது:
தர்பூசணி விற்பனை செய்யப்படும் கடைகளில், தர்பூசணி மாதிரியை எடுத்துச் சென்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படும்.
அதில், ரசாயண நிறமூட்டி கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.