ADDED : டிச 29, 2024 01:05 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு. இக்கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள எல்லையம்மன் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன், பொது நிதியின் கீழ், பெண்களுக்கான பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கழிப்பறை கட்டப்பட்ட துவக்கத்தில், அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து கழிப்பறை வளாகத்திற்குள் இருந்த சிறு மின்விசை பம்பு மற்றும் மோட்டார் போன்றவை பழுது காரணமாக தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், நாளடைவில் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் போனது. தற்போது, முறையான பராமரிப்பின்மை காரணமாக, இக்கட்டடம் பழுதடைந்து, செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, பெண்கள் கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.