/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் மேம்பாலம் பலப்படுத்தும் பணி தீவிரம்
/
ஒரகடம் மேம்பாலம் பலப்படுத்தும் பணி தீவிரம்
ADDED : பிப் 12, 2025 01:54 AM

ஸ்ரீபெரும்புதுார்,காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து ஒரகடம், படப்பை வழியாக, வண்டலுார் செல்லும், 47 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒரகடம், படப்பை, வண்டலுார், தாம்பரம் வழியாக சென்னைக்கு செல்கின்றனர்.
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், இருவழி பாதையாக இருந்த சாலை, பல கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
இதில், 620 மீட்டர் துாரத்திற்கு ஒரகடம் சந்திப்பில், 22 கோடி ரூபாய் செலவில், 10 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது, ஒரகடம் மேம்பாலம் பலவீனம் அடைந்து, வாகனங்கள் செல்லும்போது அதிர்வு ஏற்படுகிறது. வாலாஜாபாதில் இருந்து வண்டலுார் மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தின் கான்கிரீட் உதிர்ந்து விழுகிறது.
இதையடுத்து, ஐ.ஐ.டி., நிறுவன வல்லுநர்களின் உதவியுடன் மேம்பாலத்தை முழுமையாக பழுது நீக்கி சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் முடிவெடுத்தனர்.
கடந்த டிச., மாதம் ஐ.ஐ.டி., பேராசிரியர் அப்பாராவ் தலைமையிலான குழு, ஒரகடம் மேம்பாலத்தை ஆய்வு செய்து, சேதமான இடங்களை பலப்படுத்த நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், ஒரகடம் மேம்பாலத்தில் கான்கிரீட் உதிர்ந்து ஓட்டை ஏற்பட்ட பகுதியில், அவசர பழுது பார்க்கும் முறையில், மேம்பாலத்தை பலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:
மேம்பாலத்தின் மீது ஓட்டை ஏற்பட்ட பகுதி முழுதும் 'கிரவுன்டிங்' முறையில் பலப்படுததும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பாலத்தின் உதிர்ந்த சிமென்ட் பூச்சை முழுமையாக அகற்றி,
'வெல்டு மெஸ்' எனும் இரும்பு கம்பியை வைத்து, அதன் மீது சிமென்ட் கலவை பூசப்படும்.
பின், கிரவுன்டிங் முறையில், பாலத்தின் ஒரு பகுதியில் துளையிட்டு, அதன் வழியே சிமென்ட் கலவையை செலுத்தி, இடைவெளி ஏற்பட்ட பகுதிகளில் சிமென்ட் நிரப்பி பலப்படுத்தப்படும்.
இதையடுத்து, வாலாஜாபாத் -- வண்டலுார் மார்க்கமாக, மேம்பால சாலையில் தார் ஊற்றி சீரமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.