/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருட வாகனத்தில் யதோக்தகாரி பெருமாள்
/
கருட வாகனத்தில் யதோக்தகாரி பெருமாள்
ADDED : மார் 25, 2025 07:50 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 52வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும், இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான நேற்று காலை 7:00 மணிக்கு கருடசேவை உத்சவம் நடந்தது. இதில், கருடவாகனத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இரவு ஹனுமந்த வாகன உத்சவம் நடந்தது. நான்காம் நாள் உத்சவமான இன்று காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வருகிறார்.
ஐந்தாம் நாள் உத்சவமான நாளை காலை தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்திலும் உலா வருகிறார். ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் வரும் 28 ம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.