/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருக்கு... ஆனா இல்லை வடிகால்வாயை காணோம்
/
இருக்கு... ஆனா இல்லை வடிகால்வாயை காணோம்
ADDED : அக் 19, 2024 02:11 AM

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்தில், வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. சென்னை புறநகரில் வரதராஜபுரம் இருப்பதால், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், வயல்வெளிகளாக இருந்த 1,000 ஏக்கர் விளை நிலம், நகர்களாக மாறிவிட்டன. அஷ்டலட்சுமி நகர், புருஷோத்தமன் நகர், புவனேஸ்வரி நகர், பரத்வாஜ் நகர் என, 20க்கும் மேற்பட்ட நகர்கள் புதிதாக அமைந்துள்ளன. இங்கு, 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரதராஜபுரம் ஊராட்சி வழியே செல்லும் அடையாறு கால்வாயில் பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், வரதராஜபுரத்தை கடந்து செல்லும் வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் குறுக்கே மழைநீர் செல்ல வரதராஜபுரத்தில் 10க்கும் மேற்பட்ட வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சாலையில், வண்டலுாரில் இருந்து மீஞ்சூர் செல்லும் சாலையோரம் வரதராஜபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்கள் உள்ளன. நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலத்தின் வழியாக சென்ற கால்வாய் வழித்தடத்தில் மண் கொட்டி மூடி விட்டனர். பல இடங்களில் கால்வாய் உள்ள பகுதியில் வணிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதனால், வரதராஜபுரத்தில் தேங்கும் மழைநீர் வெளிவட்ட சாலையை கடந்து மறு பகுதிக்கு செல்ல வழியில்லாததால், ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு மேலும் அதிகமாகிறது.
எனவே, தனியார் நிலத்தில் மழைநீர் சென்ற கால்வாய் வழித்தடத்தில் பைப்லைன் அமைத்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

