/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புது தொழில், உற்பத்தி வியாபாரத்தில் இளைஞர்கள்... உற்சாகம்! காஞ்சியில் 3 ஆண்டுகளில் 12,438 நிறுவனங்கள் உதயம்
/
புது தொழில், உற்பத்தி வியாபாரத்தில் இளைஞர்கள்... உற்சாகம்! காஞ்சியில் 3 ஆண்டுகளில் 12,438 நிறுவனங்கள் உதயம்
புது தொழில், உற்பத்தி வியாபாரத்தில் இளைஞர்கள்... உற்சாகம்! காஞ்சியில் 3 ஆண்டுகளில் 12,438 நிறுவனங்கள் உதயம்
புது தொழில், உற்பத்தி வியாபாரத்தில் இளைஞர்கள்... உற்சாகம்! காஞ்சியில் 3 ஆண்டுகளில் 12,438 நிறுவனங்கள் உதயம்
ADDED : ஜன 25, 2025 02:54 AM
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு, மரம், கட்டுமானம் உள்ளிட்ட 35 வகைப்பாடுகளின் கீழ், மூன்று ஆண்டுகளில் மட்டும் 12,438 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகரித்து இருப்பது, புள்ளியியல் துறை வெளியிட்ட ஆண்டறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவில்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் பெயர் பெற்று விளங்குவது போல், தொழில் துறைக்கும் பெயர் பெற்றது.
மிகப்பெரிய கார் தொழிற்சாலைகளும், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கண்ணாடி, ரசாயன தொழிற்சாலைகள் என, 2,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கடனுதவி
இதில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
சிறு, குறு நிறுவனங்களுக்கு என, தனி துறையே மத்திய - மாநில அரசுகளில் இயங்கி வருகின்றன.
சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அதன் வாயிலாக வேலைவாய்ப்பு பெருக்குவதற்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்களும், மானியமும், கடனுதவியும் வழங்கப்படுகின்றன.
இந்த அரசு திட்டங்களை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் தொழில் மையங்களில் விண்ணப்பித்து, கடனுதவி பெற்று, தங்களது நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிச மாக அதிகரித்து வருகின்றன.
உணவு நிறுவனங்கள், மரம், காகிதம் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய அளவிலான மோட்டார், பர்னிச்சர், கட்டுமானம் கடைகள் என சிறிய அளவிலான நிறுவனங்கள், உற்பத்தி, சேவை, வியாபார அடிப்படையில் இந்த துறையின் கீழ் நடத்துகின்றன.
ஹோட்டல், ஜெராக்ஸ் கடை, டெய்லர் கடை என, மிகச்சிறிய அளவிலான தொழில்களும், இந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் வருகின்றன. அவ்வாறு, புதிதாக தொழில் முனைவோரை உருவாக்க பல்வேறு திட்டங்களின் கீழ் வட்டி மானியம், மின்கட்டண மானியம் போன்றவை கிடைப்பதால், தங்களது நிறுவனங்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் பதிவு செய்ய தனியார் நிறுவனங்கள் முயல்கின்றன.
அழைப்பு
அவ்வாறு பதிவு செய்ததன் அடிப்படையில், கடந்தாண்டு 23,209 நிறுவனங்கள் மாவட்டம் முழுதும் செயல்படுவது தெரியவந்துள்ளது.
பதிவு செய்யாத நிறுவனங்களையும் பதிவு செய்துகொள்ள தொழில் மையம் அழைப்பு விடுத்து வருகிறது.
மாவட்ட அளவில் சிறு, குறு நிறுவனங்கள் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில், தொடர்ந்து அதிகரித்து இருப்பது, காஞ்சிபுரம் மாவட்ட புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.
அதவாது, கடந்த 2021 - 22ல், 10,771 தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. 2022 - 23ல், 19,892 நிறுவனங்களும், 2023 - 24ல், 23,209 நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் மட்டும், 12,438 நிறுவனங்கள் 35 வகைகளாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிப்காட் பகுதிகளில், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களும் வேகமாக தங்களது நிறுவனங்களை அமைக்கின்றனர்.
சிப்காட் போன்று, சிட்கோ தொழிற்பேட்டைகளும் அடுத்தடுத்து அமைகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை, திருமுடிவாக்கம் ஆகிய இடங்களை தொடர்ந்து, வையாவூரில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை பணிகள் வேகமெடுத்துள்ளன.
அங்கும் பல்வேறு சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், வேலைவாய்ப்பு பலருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.