/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
28 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுப்பிடிப்பு
/
28 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டுப்பிடிப்பு
ADDED : ஆக 20, 2024 04:43 AM

நாகர்கோவில்: ஆறு கொலை உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை நேற்று காலை சுசீந்திரம் அருகே போலீசார் சுட்டு பிடித்தனர் இதில் எஸ்.ஐ.,ஒருவர் காயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரை குளம் அருகே கரும்பாட் டூரை சேர்ந்த ரவுடி செல்வம் என்ற துாத்துக்குடி செல்வம் 39. இவர் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, வழிப்பறி உட்பட 28 வழக்குகள் உள்ளன.
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தனர். அவர் திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் செல்வம் சிக்கவில்லை.
நேற்று அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து டி.எஸ்.பி., மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, எஸ்.ஐ. லிபி பால்ராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்றனர். அங்கிருந்தும் செல்வம் தப்பிவிட்டார்.
அவர் சுசீந்திரம் அருகே தேரூர் பைபாஸ் சாலையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சென்றனர்.
அவர்களை கண்டதும் செல்வம் தப்பி ஓட முயற்சித்தார். போலீசார் சுற்றி வளைத்தபோது எஸ்.ஐ., லிபி பால்ராஜை கத்தியால் வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதம் அலி துப்பாக்கியால் செல்வத்தின் காலில் சுட்டார். இதில் வலது காலில் காயம் ஏற்பட்ட செல்வம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே மருத்துவமனையில் லிபிபால்ராஜும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கையில் 10 தையல்கள் போடப்பட்டுள்ளன.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

