/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
18 மணி நேரத்தில் கடலில் மூழ்கி 5 டாக்டர்கள் உட்பட 8 பேர் பலி: கன்னியாகுமரியில் சோகம்
/
18 மணி நேரத்தில் கடலில் மூழ்கி 5 டாக்டர்கள் உட்பட 8 பேர் பலி: கன்னியாகுமரியில் சோகம்
18 மணி நேரத்தில் கடலில் மூழ்கி 5 டாக்டர்கள் உட்பட 8 பேர் பலி: கன்னியாகுமரியில் சோகம்
18 மணி நேரத்தில் கடலில் மூழ்கி 5 டாக்டர்கள் உட்பட 8 பேர் பலி: கன்னியாகுமரியில் சோகம்
ADDED : மே 06, 2024 11:24 PM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக 18 மணி நேரத்தில் 8 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.
திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றும் நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த சர்வ தர்ஷித், திண்டுக்கல் பிரவீன் ஷாம், வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி உட்பட 12 பேர் கார் மூலம் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் தங்கிய அவர்கள் நேற்று காலை திற்பரப்பு அருவிக்கு சென்றனர் அங்கு தண்ணீர் குறைவாக விழுந்ததால் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு ஆறு பேர் கடலில் இறங்கி கால் நனைத்து கொண்டிருந்தனர். மற்ற ஆறு பேர் கடற்கரையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் வந்த பெரிய அலை கடலுக்குள் நின்று கொண்டிருந்த ஆறு பேரையும் இழுத்துச் சென்றது. அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற நான்கு பேரையும் அலை உள் கடலுக்குள் இழுத்து சென்றது. மீட்கப்பட்ட இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சர்வ தர்ஷித் 23, இறந்தார்.
குளச்சல் கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர், ஒரு மணி நேரத்திற்கு பின் வெங்கடேஷ் 24, பிரவீன் ஷாம் 23, காயத்ரி 25, சாருகவி 23 உடல்களை மீட்டனர். பலி ஐந்தாக உயர்ந்தது.
மற்றொரு சம்பவம்
சென்னை சூளைமேடு, வில்லிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். குளச்சல் அருகே கோடி முனை பகுதியில் உள்ள தூண்டில் வளைவிலும், பாறையிலும் சிலர் ஏறி நின்றனர். அப்போது பெரிய அலை ஆறு பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. உள்ளூர் மீனவர்கள் நான்கு பேரை மீட்டனர். சூளைமேட்டை சேர்ந்த வெஜீஸ் 54, மனோஜ் குமார் 25 ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பிரேமதாஸ் மகள் ஆதிஷா 7, நேற்று முன்தினம் தேங்காப்பட்டணம் துறைமுகப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது பெரிய அலை சிறுமியை கடலுக்குள் எடுத்துச் சென்றது. நேற்று இவரது உடல் மீட்கப்பட்டது.
வெளியூர் பயணியருக்கு தெரியுமா
தென்னிந்திய கடல் பகுதியில் மே4, 5 தேதிகளில் அதிக தாக்கத்துடன் கூடிய கடல் சீற்றம் இருக்கும் என்று இந்திய தேசிய பெருங்கடல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குமரி மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கடலுக்கு மீனவர்கள், பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கு தகவல் தெரியாது. கடற்கரைக்குச் செல்லும் பயணிகளை தடுப்பதற்கு போலீசாரை நியமிக்காததும் இந்த விபத்துகளுக்கு காரணமாகிவிட்டது.