/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பேரலை எச்சரிக்கை குமரியில் கட்டுப்பாடு
/
பேரலை எச்சரிக்கை குமரியில் கட்டுப்பாடு
ADDED : ஆக 05, 2024 11:52 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடல்பகுதிகளில் பேரலை எழும்பும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளதால் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தென் தமிழக கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் 2.1 மீட்டர் முதல் 2.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் என வாய்ப்பு உள்ளதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் ஏழு வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விடை அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ. முதல் 45 கி.மீ வரையும், சில நேரம் 55 கி.மீ வேகம் வரை அதிகமாக இருக்கும் என்று தேசியப் பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும், சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகு பெரிய அலையில் சிக்கி கவிழ்ந்தது. படகிலிருந்த ஆறு மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில் மற்றொரு படகில் வந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.