/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
/
திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
ADDED : மே 21, 2024 07:52 AM

நாகர்கோவில், : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறு, அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை, விடிய விடிய பெய்து நேற்று மதியம் வரை நீடித்தது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மழையுடன் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குளச்சலில் நேற்று காலை பெய்த கனமழையால், 300-க்கும் மேற்பட்ட சிறுபடகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று காலை மழையால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கப்பட்டது.
48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.41 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 486 கன அடியாக இருந்த நிலையில், இது மேலும் அதிகரிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, 1070 கன அடி தண்ணீர் உபரிநீராக திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழையை பயன்படுத்தி கன்னிப் பூ சாகுபடிக்கு வயல்களை சமன் செய்து, நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள்ஈடுபட்டுள்ளனர்.

