/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் இடைவிடாத மழையால் திற்பரப்பு அருவியை பார்க்க தடை; மயிலாடியில் 14 செ.மீ. பதிவு
/
குமரியில் இடைவிடாத மழையால் திற்பரப்பு அருவியை பார்க்க தடை; மயிலாடியில் 14 செ.மீ. பதிவு
குமரியில் இடைவிடாத மழையால் திற்பரப்பு அருவியை பார்க்க தடை; மயிலாடியில் 14 செ.மீ. பதிவு
குமரியில் இடைவிடாத மழையால் திற்பரப்பு அருவியை பார்க்க தடை; மயிலாடியில் 14 செ.மீ. பதிவு
ADDED : மே 23, 2024 11:44 PM

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியை பார்க்கவும் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
மழை தொடர்ந்து பெய்வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் அருவியை பார்க்க செல்லவும் தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பனையிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
கன்னியாகுமரி, கொட்டாரம், சாமிதோப்பு, மயிலாடி, அஞ்சுகிராமம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தொடங்கிய மழை நேற்று காலை 6 :00 மணி வரை இடைவிடாது பெய்தது. இதனால் பல இடங்களையும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மயிலாடியில் 14 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. இங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 45.25 அடியாக இருந்தது. அணைக்கு 1839 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 636 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 520 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 51.30 அடியாக உயர்ந்துள்ளது . முக்கடல், மாம்பழத்தாறு உள்ளிட்ட அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தமாக 152 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களும் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சாரல் விட்டு விட்டு பெய்கிறது. மக்கள் வெளியில் நடமாட முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். கோணம் பறக்கை ஈத்தாமொழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரம் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. உடனடியாக சரி செய்யப்பட்டது.
மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்று காலை 8:00 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. நேற்று மாலையிலும் மழை நீடித்தது.