/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பிற நாடுகளுக்காக 433 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி 'இஸ்ரோ' சாதனை
/
பிற நாடுகளுக்காக 433 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி 'இஸ்ரோ' சாதனை
பிற நாடுகளுக்காக 433 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி 'இஸ்ரோ' சாதனை
பிற நாடுகளுக்காக 433 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி 'இஸ்ரோ' சாதனை
ADDED : மார் 09, 2025 02:50 AM
நாகர்கோவில்: ''மற்ற நாடுகளுக்காக 433 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது'' என அதன் தலைவர் நாராயணன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் தனியார் கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. மேலும் இரண்டு அமைக்க பிரதமர் மோடி அனுமதினார். அதன்படி ஸ்ரீஹரிகோட்டா மற்றும் குலசேகரப்பட்டினத்தில் இதனை அமைக்க பணிகள் துவங்கியுள்ளன. இரண்டு ஆண்டுகளில் இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்.
உலக அளவில் பெருமை
நிலாவுக்கு மூன்று முறை செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'சந்திரயான் 2' செயற்கைக்கோள் திட்ட இயக்குனர் பெண் தான். 'சந்திரயான் 3' செயற்கை கோள் நிலாவின் தென் துருவத்தில் இறங்கியதில் இந்தியா உலக அளவில் பெருமை அடைந்தது. இதில் பணியாற்றிய 50 சதவீதம் பணியாளர்கள் பெண்கள் தான்.
இந்தியாவின் மிக முக்கியமான துறைகளில் இஸ்ரோவும் ஒன்று. 'சந்திரயான் 4' நிலாவில் தரை இறங்கி அங்கிருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கு கொண்டு வரும் திட்டம் 2028ல் நடைபெறும். அதற்கான அனைத்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. நிலவுக்கு மனிதனை அனுப்ப மிகுந்த பண செலவு ஏற்படுகிறது. ஆனால் கூட்டு முயற்சியால் செலவு குறையும்.
இந்தியா 1975-ல் மற்ற நாட்டின் உதவியுடன் முதல் செயற்கை கோளை அனுப்பியது. ஆனால் தற்போது 433 செயற்கை கோள்கள் பிற நாடுகளுக்காக இந்திய மண்ணில் இருந்து நமது ஏவுகணை மூலம் விண்ணில் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் எந்த இடத்தில் அதிக மீன் கிடைக்கும் என்பதை மீனவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக விண்வெளியில் அதற்கான செயலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் வருகிறது என்றார்.