/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
8 பேர் பலியான பின் கடற்கரையில் பாதுகாப்பு
/
8 பேர் பலியான பின் கடற்கரையில் பாதுகாப்பு
ADDED : மே 07, 2024 11:16 PM

நாகர்கோவில்:திருச்சியில் தனியார் மருத்துவ கல்லுாரியில் இருந்து 12 பேர் கொண்ட பயிற்சி மருத்துவர்கள் குழு, கன்னியாகுமரியின் லெமூர் கடற்கரையில் நின்ற போது, ராட்சத அலையில் சிக்கி ஐந்து பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.
'உயரமான அலைகள் எழும்' என இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்திருந்தது. 'மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்' என, கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், கடற்கரைக்கு பயணியர் செல்லாமல் தடுக்க அறிவிப்போ, போலீஸ் பாதுகாப்போ இல்லை. வெளியூர் பயணியர் கடலுக்கு சென்றதால், இரு நாட்களில் ஐந்து பயிற்சி டாக்டர்கள் உட்பட எட்டு பேர் இறந்தனர்.
தொடர்ந்து, நேற்று முதல் கடற்கரையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லெமூர், ரஸ்தா காடு, சங்குத்துறை, சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரைகளில் பயணியர் உள்ளே செல்லும் பகுதிகளில், கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, போலீசாரும் கண்காணிக்கின்றனர்.
சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் மிக குறைவான தண்ணீரே விழுவதால், பயணியர் குளிக்க ஆர்வம் காட்டவில்லை.
இதற்கிடையே, பயிற்சி டாக்டர்கள் ஐந்து பேர் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

