/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
இருவரை தாக்கிய புலி மர்மமான முறையில் பலி
/
இருவரை தாக்கிய புலி மர்மமான முறையில் பலி
ADDED : ஏப் 25, 2024 02:40 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஆண்டிப்பொத்தையைச் சேர்ந்தவர் ஜெயன், 28. இவர் குலசேகரம் அருகே தன் தோட்டத்தில் அன்னாசிப் பழம் பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு டூ - வீலரில் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். தேக்கல் என்ற இடத்தில் ரோட்டில் குறுக்கே பாய்ந்த, 12 வயது பெண் புலி இவரது டூ - வீலர் மீது மோதியது. ஜெகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின், புலி அங்கு அருகில் ரப்பர் தோட்டத்துக்குள் ஓடியது.
அங்கு, ரப்பர் பால் வெட்டிக் கொண்டிருந்த திருநந்திக்கரையைச் சேர்ந்த பூதலிங்கம், 64, என்பவரை தாக்கியது. புலியிடமிருந்து விடுபட அவர் முயற்சி செய்த போது, நகங்கள் பட்டு காயம் ஏற்பட்டது. பின், சிறிது தூரம் ஓடிய புலி சுருண்டு விழுந்தது.
புலி பதுங்கி படுத்து கிடக்கிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என்று தெரியாத நிலையில், வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் வந்து பார்த்தபோது புலி இறந்து கிடந்தது.
புலியின் உடலில் முள்ளம்பன்றி குத்தியதற்கான அறிகுறி தெரிந்தது. அதன் முட்கள் புலியின் உடலில் இருந்தன. இதனால், முள்ளம்பன்றியுடன் நடத்திய போராட்டத்தில் புலி படுகாயம் அடைந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.
எனினும், உடல் பரிசோதனைக்கு பிறகே, புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

