/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நாளை மகா சிவராத்திரி: குமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடக்கம்
/
நாளை மகா சிவராத்திரி: குமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடக்கம்
நாளை மகா சிவராத்திரி: குமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடக்கம்
நாளை மகா சிவராத்திரி: குமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடக்கம்
ADDED : பிப் 25, 2025 07:06 AM
நாகர்கோவில்: நாளை மகா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 கோயில்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் இன்று மதியம் தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் 12 பழங்கால சிவாலயங்கள் உள்ளன. திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருந்திக்கரை, பொன்மனை, திருவிடைக்கோடு, கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாளம் ஆகிய இடங்களில் இக்கோயில்கள் அமைந்துள்ளன.
சிவராத்திரி நாளில் பக்தர்கள் ஓடிச்சென்றும், வாகனங்களில் சென்றும் வழிபடுவது சிறப்பாகும்.
புருஷா மிருகம் என்பது பாதி மனித உருவம், பாதி புலி உருவம் அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவ பக்தர். சிவனை தவிர வேறு எந்த இறைவனையும் ஏற்க மாட்டார். விஷ்ணு நாமம் இவருக்கு பிடிக்காது. தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக பகவான் கிருஷ்ணன் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமனை அழைத்து, குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற நடத்தப்படும் யாகத்திற்கு புருஷா மிருகத்தின் பால் தேவைப்படுவதால் அதை பெற்று வரும்படி பீமனை அனுப்பி வைத்தார். கூடவே 12 ருத்ராட்சங்களை வழங்கி கோபாலா கோவிந்தா என்று அழைத்தபடி புருஷா மிருகத்தை நெருங்குமாறு கூறிய கிருஷ்ண பகவான், என் பெயரை கேட்க விரும்பாத புருஷா மிருகம் உன் மீது பாயும், நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டு விடு அது சிவலிங்கமாக மாறியதும் அதற்கு புருஷா மிருகம் பூஜைகள் செய்ய தொடங்கிவிடும்.
அங்கிருந்து நீ ஓடிவிடு. இப்படி ஒவ்வொரு இடமாக துரத்தி வரும்போது ருத்ராட்சத்தை போடும்படி கூறினார். 12 வது இடத்தில் ருத்ராட்சம் விழும்போது நானும் பரமேஸ்வரனும் இணைந்து காட்சி தருவோம் என்று விளக்கி பீமனை அனுப்பி வைக்கிறார்.
முதல் ருத்ராட்சம் முஞ்சிறை அருகே திருமலையில் விழுந்தது. கடைசி ருத்ராட்சம் திருநட்டாலத்தில் விழுந்தது. அங்கு ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து சிவனும் விஷ்ணு ஒன்று என்பதை புருஷா மிருகத்துக்கு உணர்த்தினார்.
அதைத்தொடர்ந்த யாகத்துக்கு பால் வழங்க புருஷாமிருகம் சம்மதித்தது. இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடக்கிறது.
பக்தர்கள் கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்றுப்பையும் கொண்டு கோபாலா கோவிந்தா என்று கோஷமிடுவர். இன்று மதியம் தொடங்கும் இந்த ஓட்டம் நாளை இரவு திருநட்டாலத்தில் நிறைவு பெறுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் நாளை அதிகாலை முஞ்சிறையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்குவார்கள்.

