ADDED : ஜன 07, 2025 01:58 AM
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது?தேர்வு எழுதி 26,000 பேர் காத்திருப்பு
சேலம், இடைநிலை ஆசிரியர் பணிக்கு நடந்த, 'நியமன தேர்வு' முடிவை வெளியிட்டு, பணிஆணையை உடனடியாக வழங்கக்கோரி, தேர்வு எழுதி காத்திருக்கும் பலர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, மனு அளித்த கருமந்துறையை சேர்ந்த ஆர்த்தி, 36, கூறியதாவது: தமிழகத்தில், 2013க்கு பிறகு, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதே ஆண்டில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 7,000 பேர் மட்டும் பணியமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 23,000 பேர் இன்னமும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதே நேரம் 2017, 2019, 2022ல், அடுத்தடுத்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதிதேர்வு நடத்தி, முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை, பணி நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நியமன தேர்வு எழுதினால் மட்டுமே, பணியமர்த்தப்படுவர் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை, 21ல், 26,000 பேர், தமிழகம் முழுவதும் நியமன தேர்வு எழுதினர். ஆனால் ஆறு மாதமாக தேர்வு முடிவை வெளியிடாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2,768 பணியிடம் மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். தகவல் உரிமை சட்டத்தில், 10,668 பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது காலியிடம், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நியமன தேர்வு முடிவை உடனடியாக வெளியிட்டு, பணிஆணை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, 38 மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.