/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கண்ணாடி பாலம் பார்க்க ஆர்வம் பாதுகாப்பு பணியில் 35 ஊழியர்கள் படகு போக்குவரத்து நேரமும் அதிகரிப்பு
/
கண்ணாடி பாலம் பார்க்க ஆர்வம் பாதுகாப்பு பணியில் 35 ஊழியர்கள் படகு போக்குவரத்து நேரமும் அதிகரிப்பு
கண்ணாடி பாலம் பார்க்க ஆர்வம் பாதுகாப்பு பணியில் 35 ஊழியர்கள் படகு போக்குவரத்து நேரமும் அதிகரிப்பு
கண்ணாடி பாலம் பார்க்க ஆர்வம் பாதுகாப்பு பணியில் 35 ஊழியர்கள் படகு போக்குவரத்து நேரமும் அதிகரிப்பு
ADDED : ஜன 17, 2025 12:36 AM
நாகர்கோவில்,:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் படகு போக்குவரத்து நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு கண்ணாடி பால பாதுகாப்பு பணிக்கு பல்வேறு துறையைச் சேர்ந்த 35 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. டிச., 30-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜன. 4 முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளுவர் சிலையை பார்ப்பது மட்டுமல்லாமல் பாலத்தில் நின்று கடலின் அழகையும் ரசிக்க முடிவதால் பயணிகள் இங்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் விடுமுறை நாட்களில் படகு போக்குவரத்து காலை 8:00 மணி முதல் 6:00 மணி வரை என்று இருந்தது. காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை, விடுமுறை அல்லாத நாட்களில் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை என இருந்தது காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலத்தின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்களுக்கு வழிகாட்டவும் காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் சுற்றுலாத் துறையின் 35 பணியாளர்கள் இங்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். காலை 6:00 மணி முதல் இரவு வரை இவர்கள் சுழற்சி முறையில் இங்கு பணியாற்றுவார்கள். கண்ணாடி பாலம் வழியாக வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்த துறை அலுவலர்களுக்கு போதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.