/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கார் பம்பரில் சிக்கி சிறுவன் பலி; வியாபாரி கைது
/
கார் பம்பரில் சிக்கி சிறுவன் பலி; வியாபாரி கைது
ADDED : பிப் 12, 2024 11:41 PM
நாகர்கோவில் : கார் பம்பரில் டூவீலருடன் சிறுவன் சிக்கியிருப்பது தெரியாமல் 2 கி.மீ., துாரம் ஓட்டிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தெற்கு பால் கிணற்றான் விளையைச் சேர்ந்தவர் கோபி 39. பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மனைவி லேகா 30, மூன்று குழந்தைகளுடன் காரில் செம்பன்கரை பகுதியில் சென்றபோது அவ்வழியே சென்ற டூவீலர் மீது மோதியதில் கார் பம்பரில் டூவீலரும் சிறுவனும் சிக்கி உள்ளனர்.
இதை பார்த்து அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் காரை பின் தொடர்ந்ததால் காரை மேலும் வேகமாக ஓட்டிய கோபி சங்குத்துறை கடற்கரை பகுதியில் காரை நிறுத்தினார். டூவீலரின் பெட்ரோல் டேங்க் ரோட்டில் உரசி கொண்டே வந்ததால் காரை நிறுத்தியதும் டூவீலர் தீப்பிடித்தது. தொடர்ந்து காரின் முன் பகுதியும் தீ பிடித்து எரிந்தது.
இதை தொடர்ந்து கோபி, மனைவி, குழந்தைகள் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தும் பலனளிக்காத நிலையில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். சிறுவன் உடல் கருகி இறந்தான்.
சுசீந்திரம் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த சிறுவன் தெற்கு சூரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் மகன் அஜாஸ் அலி என்பதும் சங்குத்துறை கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த சிறுவன் செம்பொன்கரையில் உறவினரின் டூவீலரை ஓட்டி பார்க்க சென்றபோது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுசீந்திரம் போலீசார் கோபியை கைது செய்தனர். விபத்து பற்றி கோபி கூறியதாவது:
டூவீலர் மீது மோதியதும் காரை நிறுத்தினால் பொதுமக்கள் தாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் வேகமாக ஓட்டினேன். கார் வேகமாக செல்லும்போது ஏதோ சத்தம் கேட்டது.
கார் பம்பர் தான் உடைந்து சாலையில் தட்டிக் கொண்டு வருகிறது என்று நினைத்தேன். சங்குத்துறை கடற்கரைச் சென்றபோது காரின் முன் பகுதியில் தீப்பிடித்ததால் நிறுத்தினேன். அதன் பின்னர் தான் டூவீலருடன் சிறுவன் கார் பம்பரில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மீதுகொலை நோக்கம் இல்லாமல் மரணம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது