/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி இறந்ததாக புகார்
/
போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி இறந்ததாக புகார்
ADDED : ஜூலை 30, 2025 01:10 AM
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை விசாரணைக்காக பிடிக்க சென்ற இடத்தில் மூதாட்டியை தள்ளி விட்டதில் இறந்ததாக உறவினர்கள் அளித்துள்ள ஆன்லைன் புகார் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கருங்கல் அருகே மத்திக்கோடு பாம்புரி வாய்க்காலைச் சேர்ந்தவர் சாகித் ஷெட்டி 20. நாகர்கோவிலில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறார்.
கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது திங்கள்சந்தையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பெண் பியூட்டிஷியன் படித்து வருகிறார். ஏற்கனவே திருமணமானதை மறைத்து அந்த பெண் சாகித் ஷெட்டியுடன் பழகியுள்ளார்.
இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்த நிலையில் இரு வீட்டாருக்கும் தெரிந்ததால் இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பெண்ணின் கணவர் இரணியல் போலீசில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். திருநெல்வேலியில் இருந்து அப்பெண்ணை போலீசார் மீட்டனர். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பெண்ணுடன் பழகிய போது எடுத்த படங்களை சாகித் ஷெட்டி சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். நேற்று அதிகாலை சாகித் ஷெட்டியை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு டவ்வல் மட்டும் உடுத்திருந்த சாகித் ெஷட்டியை பிடிக்க முயன்ற போது அவரது பாட்டி சூசை மரியாள் தடுத்தார். அப்போது போலீசார் அவரை தள்ளிவிட்டனர்.
ஆடை மாற்றி வருவதாக கூறிச்சென்ற சாகித் ஷெட்டி வீட்டின் பின் வாசல் வழியாக தப்பினார். மயக்க நிலையில் இருந்த சூசைமரியாளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சூசைமரியாளின் மருமகள் சந்திரகலா ஆன்லைனில் அளித்த புகாரில் போலீசார் மாமியாரை தள்ளி விட்டதில் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.