/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சுசீந்திரம் தெப்பக்குளம் சீரமைப்பு முறைகேடு; அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
/
சுசீந்திரம் தெப்பக்குளம் சீரமைப்பு முறைகேடு; அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
சுசீந்திரம் தெப்பக்குளம் சீரமைப்பு முறைகேடு; அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
சுசீந்திரம் தெப்பக்குளம் சீரமைப்பு முறைகேடு; அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : டிச 12, 2025 07:27 AM
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பில் முறைகேடு தொடர்பாக ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
சுசீந்திரம் கார்த்திக் கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தெப்பக்குளத்தை துார்வாரும் பணியை ஒப்பந்ததாரர் நிறுவனம் மேற்கொள்கிறது. பணியை மேற்கொள்ள தொல்லியல்துறையின் அனுமதி பெறவில்லை. சட்டவிரோதமாக அதிக ஆழத்தில் மண் அள்ளப்பட்டுள்ளது. கற்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை வெளியே எடுத்துச் செல்லப்பட்டு தனியாருக்கு சொந்தமான இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அறநிலையத்துறையின் சில அதிகாரிகள் உடந்தை. இதனால் தெப்பக்குளத்தின் வடக்கு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பாதைகள் சேதமடைந்துள்ளன. தொல்லியல்துறை, அண்ணா பல்கலை நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும். எடுத்துச் செல்லப்பட்ட மணல், கற்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர் மற்றும் அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிளீட்டஸ் ஆஜரானார். கோயில் தரப்பு வழக்கறிஞர்: தெப்பக்குளத்தை சீரமைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அது ஆய்வு செய்தது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பழமையான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க சீரமைப்பதில் அறநிலையத்துறை கவனக்குறைவாக செயல்படுகிறது என்பதற்கு முன்னுதாரணமான வழக்கு இது. இக்கோயில் விவகாரத்தில் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர் ஜன.8 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

