/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது : ஆனால் நடக்கவில்லை
/
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது : ஆனால் நடக்கவில்லை
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது : ஆனால் நடக்கவில்லை
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது : ஆனால் நடக்கவில்லை
ADDED : செப் 17, 2011 02:59 AM
நாகர்கோவில் : பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்படம் என்று பல தேதிகள் குறிப்பிட்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாபஸ் ஸ்டாண்ட் ஒரு வழியாக பணிகள் முடிவடையாமலே நேற்று திறக்கப்பட்டது.
ஆனால் திறக்கப்பட்ட நேரமோ, என்னவோ, பொதுமக்களுக்கு பயன்படாதநிலையில், மீண்டும் மூடப்பட்டது. அரசியல் கட்சிகளின் மறியலால் எம்.பி., மற்றும் நகராட்சி சேர்மன் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில், நகரின் மையபகுதியில் அமைந்துள்ளது அண்ணா பஸ் ஸ்டாண்ட். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த இந்த பஸ் ஸ்டாண்ட் சேதமானதால், பஸ்கள் இயக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, பஸ் ஸ்டாண்ட் பணிகளுக்கு நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ ஒருகோடியே, 29 லட்சம் செலவில் தரைதளம், மற்றும் மேம்பாட்டிற்காக 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 15ம்தேதி துவங்கியது.இதனையடுத்து அண்ணாபஸ் ஸ்டாண்டில் இயங்கி வந்த அனைத்து பஸ்களும் வடசேரி பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களாக பணிகள் நடந்து வந்த நிலையில், ஜல்லி, மணல் தட்டுபாடு காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது.இந்த நிலையில் அப்போதைய மாவட்ட கலெக்டர் அஷிஸ்குமார் பணிகளை பார்வையிட்டு, கடந்த ஆக.15ம் தேதி பணிகளை முடித்து பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறினார். இருப்பினும் பணிகள் நடைபெறாத நிலையில் தற்போதைய மாவட்ட கலெக்டர் மதுமதி பணிகளை பார்வையிட்டு, கடந்த செப்.,1ம் தேதி பஸ் ஸ்டாண்ட் பயணிகளின் நலன் கருதி திறக்கப்படும் என கூறினார். இதற்கிடையே நாகர்கோவில் நகராட்சி கூட்டத்தில் சேர்மன் அசோகன் சாலமன் செப்.15ம் தேதி பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறினார்.இந்த நிலையில் தரைதளம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதால், பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் சேர்மன் அசோகன்சாலமன் அறிவித்தார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், நேற்று (16ம் தேதி) காலை அண்ணாபஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெறும் எனவும், நகராட்சி சேர்மன் அசோகன்சாலமன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் திறந்து வைப்பதாகவும், இதில் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், ஹெலன்டேவிட்சன் எம்.பி., நகராட்சி ஆணையர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பச்சைமால் திடீரென பஸ் ஸ்டாண்டிற்கு வந்து ஆய்வு நடத்தினார். அப்போது உடன் இருந்த நாஞ்சில்முருகேசன் எம்.எல்.ஏ., முறையான அழைப்பிதழ் இல்லை எனவும், பணிகள் முடிவடையாமல் திறக்கப்படுகிறது எனவும் கூறினார்.நேற்று காலை 8.30 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறியிருந்த நகராட்சி சேர்மன் அசோகன்சாலமன், துணைசேர்மன் சைமன்ராஜ், மற்றும் சில கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையர் ஆகியோர் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்தனர். சிறிது நேரம் கழித்து ஹெலன்டேவிட்சன் எம்.பி.,யும் வந்தார். அமைச்சர் பச்சைமால் வருகைக்காக அவர்கள் காத்துஇருந்தனர். ஆனால் 9 மணிவரை அவர் வராத நிலையில் ஹெலன்டேவிட்சன் எம்.பியை வைத்து பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. அசோகன்சாலமன் கொடியசைத்து பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.இதனையடுத்து பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது. இதனால் தினமும் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டு விட்டது என பொதுமக்கள் கருதினர்.இந்த நிலையில் திடீரென அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நாகராஜன், சேகர், சீனு, ராம்மோகன் ஆகியோர் பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயிலில் ஒரு மோட்டார் பைக்கை குறுக்காக நிறுத்திவிட்டு ரோட்டில் அமர்ந்து பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் செல்லக்கூடாது என மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சேர்மன், துணை சேர்மன், மற்றும் ஹெலன்டேவிட்சன் எம்.பி., உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லவேண்டும் என கூறி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், வேப்பமூடு பகுதியில் இருந்து மணிமேடை ஜங்ஷன், எஸ்.பி., அலுவலகம் வழியாக பஸ் போக்குவரத்தை மாற்றி விட்டனர். மேலும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்று கொண்டு இருந்த பயணிகளிடம் மீனாட்சிபுரம் சென்று பஸ்கள் ஏறுங்கள் என கூறவே பயணிகள் அங்கிருந்து மீனாட்சிபுரம் சென்றனர். சில பயணிகள் வேப்பமூடு பகுதிக்கு பஸ் ஏற சென்றனர். காலை நேரத்தில் பயணிகளை அலைகழித்தும், பாடாய் படுத்தியும் அவர்களுக்கு இன்னல்களை உருவாக்கினர். இதில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டனர்.இந்த நிலையில், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி., செல்வராஜ் நுழைவு வாயிலில் நின்று கொண்டு இருந்த அ.தி.மு.க., வினரை கலைந்து செல்ல கூறினார். ஆனால் அவர்கள் நாங்கள் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருக்கிறோம். எங்களை எதுவும் கேட்கமுடியாது. ரோட்டில் நின்று கொண்டு இருப்பவர்களை அகற்றுங்கள் என கோஷம் இட்டனர்.இதனையடுத்து நகராட்சி சேர்மன் அசோகன்சாலமன், துணைசேர்மன் சைமன்ராஜ், ஹெலன்டேவிட்சன் எம்.பி., காங்., கட்சியை சேர்ந்த அந்தோணிமுத்து, சங்கரநாராயணபிள்ளை, மற்றும் திறப்பு விழாவிற்கு வந்த கவுன்சிலர்கள் அணைவரும் ரோட்டில் அமர்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். பஸ்கள் உள்ளே அனுமதிக்கவேண்டும் என அவர்கள் கூறினர். இதனையடுத்து டி.எஸ்.பி., செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இருதரப்பினரும் மறியலை கைவிடாத நிலையில், சேர்மன், எம்,பி., உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயற்சித்தினர். ஆனால் அவர்கள் வேனில் ஏறமறுத்து, நடந்து வருவதாக கூறினர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று வடிவீஸ்வரம் பகுதில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் கொண்டு சென்றனர்.இதனயடுத்து அண்ணாபஸ் ஸ்டாண்ட்டில் ஏற்பட்ட பதட்டம் ஒருவாறு முடிவுக்கு வந்தது.
இது குறித்து நகராட்சி சேர்மன் அசோகன்சாலமன் கூறியதாவது;-அண்ணாபஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவையொட்டி, அமைச்சரிடம் பேசி நேரம் வாங்கி திறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதனை அரசியல் ஆக்க பார்க்கின்றனர். தரைதள பணி முடிவடைந்துள்ள நிலையில், பஸ் இயக்கினால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்புள்ள. பயணிகளுக்கு தேவையான மேற்கூரை, நடைபாதை உடனடியாக அமைக்கவும், குடிநீர் வசதிகள் செய்து தரவும் ஏற்பாடு செய்து தர நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்து இருந்தது. ஆனால் தேவையில்லாத பிரச்னையாக்கி விட்டனர். இதனால் பயணிகளுக்கு தான் வேதனை. இவ்வாறு சேர்மன் அசோகன்சாலமன் கூறினார்.
இது குறித்து ஹெலன்டேவிட்சன் எம்.பி., கூறியதாவது:பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட்டால், தினமும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனை அரசியல் பண்ண சிலர் பார்க்கின்றனர். எங்களை கைது செய்தால் மட்டும் இதற்கு தீர்வு கிடைக்குமா என்பதை பொதுமக்கள் எண்ணிபார்க்கவேண்டும். இவ்வாறு ஹெலன்டேவிட்சன் எம்,பி., கூறினார்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நாகராஜன், ராம்மோகன், சேகர், சீனு கூறியதாவது:அமைச்சர் பச்சைமாலிடம் தவறானதகவல் கொடுத்து பணிகள் முடிவு அடையாமல் திறக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகளை முடித்து விட்டு திறக்கப்படவேண்டும். அடிப்படை வசதிகள், பயணிகள் நிற்க மேற்கூரை, நடைபாதை ஆகிய பணிகள் முடிவடையவில்லை. பஸ்ஸ்டாண்டில் பயணிகள் பாதுகாப்பற்றநிலையில் நிற்கவேண்டிய சூழ்நிலையை கருத்தில் கூறியதன் அடிப்படையில் அமைச்சர் பச்சைமால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.ஏது எப்படியோ நேற்று காலை பஸ் ஸ்டாண்ட்டுக்குள் பஸ்கள் சென்ற நேரத்தில் அப்பகுதியில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்பட்டதும், பயணிகள் உள்ளே சென்று பஸ் ஏறும் போது ஏற்படும் நெரிசல் இன்றி காணப்பட்டதும் மகிழ்ச்சியை தந்தாலும், இந்த மகிழ்ச்சி ஒரு சில மணி நேரங்களில் முடிவடைந்து விட்டது... தொடர்ந்து பயணிகள் வெளியே நின்று நெருக்கடியில் சிக்கி தவிப்பதும், மெகா சீரியலாக தொடர்வது வேதனைக்குரியது என்பது மட்டும் நிச்சயம்.இந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒரு நல்ல முடிவு காணவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் ஆவல்.