/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரீ பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை துவக்கம்
/
குமரீ பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை துவக்கம்
ADDED : ஆக 01, 2011 01:56 AM
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இன்று முதல் வரும் 12ம் தேதி முடிய ஆடி களபபூஜை நடக்கிறது.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடி களபபூஜை இன்று (1ம் தேதி) தொடங்குகிறது.அம்பாள் அவதரித்த ஆடிபூரம் நட்சத்திரமான இன்று முதல் தொடர்ந்து 12 நாட்களும் அம்பாளை குளிர்விப்பதற்காக இப்பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனமும், நிர்மால்யபூஜையும் நடக்கிறது.
தொடர்ந்து 5 மணிக்கு அபிஷேகமும், 6.15 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீபலியும், 8.15 மணிக்கு நிவேத்யபூஜையும் நடக்கிறது. களபபூஜையை முன்னிட்டு காலை 10 மணிக்கு எண்ணெய், தேன், பால், பன்னீர், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், களபம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் ஜவ்வாது, அக்தர், புனுகு, பச்சை, கற்பூரம், பன்னீர், கோரோசனை போன்ற வாசனை திரவியங்களை ஒன்று கலந்து வெள்ளிகுடத்தில் நிரப்பி அதை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் தந்திரி சங்கர நாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறார்.
தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 8.15 மணிக்கு பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதலும், தொடர்ந்து வெள்ளி சிம்பாசனத்தில் தாலாட்டும், ஆத்தாளபூஜை, ஏகாந்த தீபாராததனை ஆகியவை நடக்கிறது. இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடக்கும் ஆடி களபபூஜையின் 13ம் நாளான (13ம் தேதி) அதிவாச ஹோமத்துடன் ஆடிகளபபூஜை நிறைவடைகிறது. ஆடிகளபபூஜையை காண ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.