/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
லாரி டிரைவர் தாக்கியதில் பஸ் டிரைவர் பலி : திருவனந்தபுரத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை
/
லாரி டிரைவர் தாக்கியதில் பஸ் டிரைவர் பலி : திருவனந்தபுரத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை
லாரி டிரைவர் தாக்கியதில் பஸ் டிரைவர் பலி : திருவனந்தபுரத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை
லாரி டிரைவர் தாக்கியதில் பஸ் டிரைவர் பலி : திருவனந்தபுரத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை
ADDED : ஆக 05, 2011 02:39 AM
களியக்காவிளை : கேரள அரசு பஸ் டிரைவரை தாக்கி கொலை செய்ததை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் இருந்து வெள்ளறடைக்கு நேற்று முன்தினம் கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ்சில் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த ராஜன் டிரைவராக பணியில் இருந்தார். காட்டாக்கடை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி பஸ்சை முந்தி செல்ல முயன்றது.பஸ் டிரைவர் லாரி முந்திச்செல்ல வழிவிடவில்லை என தெரிகிறது. நீண்ட நேரம் இதேபோல் அரசு பஸ் டிரைவர் வழிவிடாமல் பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் அரசு பஸ்சை முந்தி சென்று நடுரோட்டில் லாரியை நிறுத்தினார். பின் லாரியில் இருந்து இறங்கி வந்த லாரி டிரைவர் பஸ் டிரைவர் ராஜனை கடுமையாக தாக்கிவிட்டு லாரியை எடுத்து சென்றார்.தாக்குதலில் படுகாயமடைந்த பஸ் டிரைவரை பயணிகள் காட்டாக்கடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பஸ் டிரைவர் உயிரிழந்ததை கண்டித்து நேற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.அனைத்து பஸ்களும் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கேரள அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தமிழக அரசு பஸ்கள் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை சென்று திரும்பியது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் வேன்கள், பஸ்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல் இயங்கியது. கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குழித்துறை டெப்போவில் இருந்து டவுன் பஸ்கள் கேரள எல்லையை ஒட்டிய மலையடி, மூவோட்டுகோணம், கண்ணுமாமூடு, பனச்சமூடு, ஊரம்பு, கொல்லங்கோடு பகுதிகள் வழியாக இயக்கப்பட்டது.