/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
விவேகானந்தர் -- திருவள்ளுவர் பாறைகளை இணைத்து கண்ணாடி கூண்டு பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
/
விவேகானந்தர் -- திருவள்ளுவர் பாறைகளை இணைத்து கண்ணாடி கூண்டு பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
விவேகானந்தர் -- திருவள்ளுவர் பாறைகளை இணைத்து கண்ணாடி கூண்டு பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
விவேகானந்தர் -- திருவள்ளுவர் பாறைகளை இணைத்து கண்ணாடி கூண்டு பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ADDED : டிச 31, 2024 12:15 AM

நாகர்கோவில் : கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழக படகுகளில் சுற்றுலா பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் செல்வதில்லை. இதை தவிர்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றும் விவேகானந்தர் பாறையை இணைத்து பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மொத்தம் 37 கோடி ரூபாய் செலவில் இங்கு கண்ணாடி கூண்டு பாலம் 72 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் இது கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெள்ளி விழா
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். வெள்ளி விழா நினைவாக கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கண்ணாடி கூண்டு பால திறப்பு விழா கல்வெட்டை திறந்து வைத்த அவர், ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து அதில் அமைச்சர்களுடன் நடந்து சென்றார்.
அங்கு குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பின், திருவள்ளுவர் சிலையின் மேற்பகுதிக்கு சென்று அவரது பாதத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சிறப்பு பட்டிமன்றம்
பின் படகில் கரை திரும்பிய முதல்வர், பூம்புகார் கைவினை பொருட்கள் அங்காடியையும், திருவள்ளுவர் சிலை லேசர் ஷோ காட்சிகளையும் துவங்கி வைத்தார். தொடர்ந்து வெள்ளி விழா அரங்கில் சொற்பொழிவாளர் சுகிசிவம் தலைமையில், திருக்குறளால் அதிக நன்மை தனி மனிதருக்கே,- சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தை துவங்கி வைத்தார்.
இன்று காலை 9:00 மணிக்கு வெள்ளிவிழா அரங்கில் முதல்வர் விழா பேருரை ஆற்றுகிறார். அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் காலையிலும், மாலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலும் கருத்தரங்கம் நடக்கிறது.
நாளை வரை நடைபெறுவதாக இருந்த வெள்ளி விழா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக 1ம் தேதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இரு நாட்களாக குறைக்கப்பட்டது.