/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி
/
'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி
'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி
'இது மோடியின் காரன்டி': கன்னியாகுமரியில் பிரதமர் உறுதி
UPDATED : மார் 16, 2024 11:26 AM
ADDED : மார் 15, 2024 11:39 PM
நாகர்கோவில்:''தமிழகத்தின் பெருமைக்குரிய, பாரம்பரியமிக்க சிறப்பம்சத்தை மோடி இருக்கும்வரை காப்பாற்றுவேன். இது, மோடியின் காரன்டி,'' என, கன்னியாகுமரியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசினார்.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
ஒற்றுமை யாத்திரை
அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
அண்ணாமலை குறிப்பிட்டது போல், 1991ல் நான், 'ஏக்தா யாத்திரா - ஒற்றுமை யாத்திரை' புறப்பட்டு காஷ்மீர் வரை சென்றிருந்தேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ளேன். நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு, காஷ்மீர் மக்கள், நல்ல பாடம் புகட்டினர். இங்கும் அதுதான் நடக்கப் போகிறது.
தி.மு.க., - காங்கிரஸ், துடைத்தெறியப்படும். காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணியின் வெற்றி தலைக்கனம், முற்றிலும் அழிக்கப்படும். 'இண்டியா' கூட்டணியால், தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.
அவர்களின் வரலாற் றில், மோசடியும், ஊழலும் முதன்மையாக இருக்கின்றன. அரசியலில் வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான் அவர்களுக்கு உள்ளது.
கன்னியாகுமரி எப்போதும், பா.ஜ.,வுக்கு பேரன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., - காங்., கூட்டணி இங்குள்ள மக்களை சுரண்டலாம் என, வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக அவர்களின் செயல்பாட்டை பார்த்தால் அது நமக்கு தெரியும்.
மார்த்தாண்டம், பார்வதி புரம் மேம்பாலங்கள் பா.ஜ., வந்த பிறகுதான் அமைந்தன. 40 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத இரட்டை ரயில் கனவை நிறைவேற்ற, தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கிறோம்; விரைவில் செயல்படுத்தப்படும்.
தி.மு.க., தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. புதிய பார்லிமென்டில், தமிழரின் பெருமையை நிலைநாட்ட செங்கோல் நிறுவினோம். அதை தி.மு.க., புறக்கணித்தது. தமிழகத்தின் பெருமைக்குரிய பாரம்பரியமிக்க சிறப்பு அம்சத்தை மோடி இருக்கும்வரை காப்பாற்றுவேன். இது, மோடியின் காரன்டி.
கன்னியாகுமரியில் இருந்து உங்கள் ஆதரவையும் குரலையும் கேட்டு, டில்லியில் இருப்பவர்களுக்கு துாக்கம் கெட்டது. உங்கள் அன்பும் பாசமும் ஆதரவும், எனக்கு மட்டும் அல்ல; மொத்த இந்தியாவுக்கும் பலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தி.மு.க., - காங்., தவறு
'இண்டியா' கூட்டணியை சேர்ந்தவர்கள், தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில், நம் மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அவர்கள் உயிரோடு திரும்ப முடியாது என்றனர். நான் துாங்கிக் கொண்டிருக்கவில்லை... எத்தனை வழிகள் உண்டோ அத்தனையும் உடைத்தோம்; எந்தவித சேதாரமுமின்றி, அவர்களை மீட்டு வந்தோம்.
மக்கள் கண்களில் விழுந்த துாசி, 'இண்டியா' கூட்டணி. மீனவ மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்; பொங்கி எழுவர். தங்கள் பாவ கணக்குக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஏனென்றால் கேட்பது நீங்கள்... கேட்பீர்களா... கேட்பீர்களா? (கூட்டத்தினர் மொபைல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து ஆமோதித்தனர்.)
இவ்வாறு மோடி பேசினார்.

