/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி கரையோர புறம்போக்கு நிலங்களில் மணல் கொள்ளை
/
காவிரி கரையோர புறம்போக்கு நிலங்களில் மணல் கொள்ளை
ADDED : பிப் 02, 2025 01:14 AM
கரூர் :மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில், பட்டா, புறம்போக்கு நிலங்களில் நவீன முறையில் மணல் கொள்ளை நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், காவிரியாறு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. லாரிகள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள் மூலம், இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக, ஆற்றுப்பகுதிகளில் இருந்து, நீதிமன்ற தடையை மீறி மணல் அள்ளி செல்லப்படுகிறது. மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை போலீஸ் ஸ்டேஷன்களிலும், ஒரு சில வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்படுகின்றன.
மணல் கொள்ளையர்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவது இல்லை. இந்நிலையில், ஆற்று பகுதியின் கரையோரத்தில் உள்ள பட்டா, புறம்போக்கு நிலங்கள் மீது, மணல் கொள்ளையர்களின் பார்வை விழுந்துள்ளது. ஒரு ஆண்டாக காவிரியாற்றில் குவாரிகள் செயல்படவில்லை என்பதால், ஆற்று கரையோரம் அதிகளவில் மணல் தேங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம், காவிரியாற்றில், 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வரை சென்றது.
இதனால், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பட்டா, புறம்போக்கு நிலங்களில் மணல் அதிகளவில் தேங்கியுள்ளது. ஆற்று கரையோரம் உள்ள பட்டா நிலங்களில் உரிமையாளருக்கு ஒரு தொகை கொடுத்து விட்டு, மணல் அள்ளப்படுகிறது. புறம்போக்கு இடத்தில் யாரிடமும் அனுமதியில்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக, நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோவில் பின்புறம் புறம்போக்கு இடத்தில் மணல் திருட்டு நடந்து வருகிறது.
இங்கு, இரவு நேரத்தில், பொக்லைன் மூலம், 5 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இவைகள், 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அதை, அரசு துறை அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வது இல்லை. இதனால், விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் குறைவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.