ADDED : ஜன 15, 2025 12:52 AM
அரவக்குறிச்சி, :
அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, மஹான் காயலா பாவா தர்கா வளாகத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி நகர தி.மு.க., செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், மஹான் காயிலா பாவா தர்கா நிர்வாகி காஜா செரீப், அரவக்குறிச்சி பேரூராட்சி, 9வது வார்டு உறுப்பினர் பஜிலா பானு, அரவக்குறிச்சி நகர தி.மு.க., நிர்வாகிகள் காஞ்சனா, ஹாரிஸ், அன்வர், அபு, யாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* கரூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், ஆண்டாங்கோவில் அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் முப்பெரும் விழா நடந்தது.
அதில், பொங்கல் விழாவையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்துடன் பொங்கல் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பிறகு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., பன்னீர் செல்வம் ஆகியோரின், பிறந்த நாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், துணை செயலாளர் ஐயப்பன், மாணவர் அணி செயலாளர் மாரி, சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜாபர் அலி உள்பட, பலர் பங்கேற்றனர்.
* கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அதில், போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர், மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். பிறகு, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
விழாவில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், எஸ்.ஐ., நாகராஜ் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். அதேபோல், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.